Thursday 26 December 2013

சற்றே பொறுத்திருப்போம்...


கேஜ்ரிவால் தலைமையில் ஆப் (Aam Aadmi Party - AAP) ஆட்சி அமைப்பது பற்றிய செய்தி வந்ததிலிருந்து பலரும் பலவிதமான விமர்சனங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்னா ஹசாரே இல்லாவிட்டால் கேஜ்ரிவால் இல்லை, ஆனால் இப்போது அன்னா ஹசாரேவுக்கு துரோகம் செய்து விட்டார் என்கிறார்கள் சிலர். காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிட்டவர் காங்கிரசுடன் சமரசம் செய்துவிட்டார்கள் என்கிறார்கள் சிலர். காங்கிரஸின் டம்மிதான் ஆப் கட்சி என்று பாஜக கூறியதை எதிரொலிக்கிறார்கள் சிலர். சாதி பார்த்தே வேட்பாளர்களை நிறுத்தியது என்றனர் சிலர். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிறார்கள் சிலர். அனுபவமற்றவர்கள், சாமானிய மனிதர்களால் ஆட்சி நடத்த முடியுமா என்கிறார்கள் சிலர்.

அன்னா ஹசாரே இயக்கம் பெரும்பாலும் நடுத்தர, படித்த வர்க்கத்தின் ஆதரவிலேயே பரபரப்பாக முன்னிலை பெற்றது. இத்தகைய இயக்கம் நீண்டகாலத்துக்கு ஓடாது. இதுவும் அப்படியே ஆயிற்று. தவிர, ஒருகாலத்தில் பெரியார் தமிழகத்தில் சொன்னதுபோல, தேர்தல் அரசியலில் தனது இயக்கம் பங்கேற்காது என்று பிடிவாதமாக இருந்தார் ஹசாரே. அவருடைய இயக்கம் தீவிரமாக இருந்த காலத்திலும்கூட, ஊழல் - லோக்பால் என்பதற்கு மேல் வேறு எந்தப் பிரச்சினையிலும் தெளிவு இருக்கவில்லை. லோக்பால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. தவிர, கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் ஆதரவு, குஜராத்தில் மோடிக்குப் புகழ்மாலை என்று தன்னிச்சையான போக்கில் பயணித்தவர் ஹசாரே.

இயக்கம் உடைந்தது. இயக்கத்திலேயே இருந்த கிரண் பேடி மீது விமான டிக்கெட் குற்றச்சாட்டு எழுந்தபிறகு காணாமல் போனார் அவர். கேஜ்ரிவால் மீது அரசே பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால் அவர் அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று சவால்விட்டுக்கொண்டே தாக்குதலையும் தொடுத்தார். ஏதோவொரு சேனா, பிரசாந்த் பூஷணின் அலுவலத்துக்குள்ளேயே புகுந்து அவரைத் தாக்கியது. ஹசாரே வாய்திறக்கவில்லை. இது பிரசாந்த் பூஷண் விளம்பரம் தேடிக்கொள்ளும் முயற்சி என்றார் கிரண் பேடி.

அரசியலில் இறங்குவது என்று கேஜ்ரிவால் முடிவு செய்தார். 2012 நவம்பரில் கட்சியைத் துவக்கினார். அவருக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று ஹசாரே பகிரங்கமாக அறிவித்தார். அதைவிட ஒருபடி மேலே போய், விமர்சிக்கவும் செய்தார். இருந்தாலும், ஹசாரேயின் நடவடிக்கைகள்மீது அதிருப்தி இருந்தும்கூட, தன் ஆசான் என்று இன்றும் கூறிவருபவர் கேஜ்ரிவால். இதுதான் இரண்டு பிரிவுகளுக்கும் வேறுபாடு.

தேர்தல் முடிவுகள் வந்ததும், நான் ஆதரவுப் பிரச்சாரம் செய்திருந்தால் கேஜ்ரிவால் முதல்வர் ஆயிருப்பார் என்று கூறியவர் ஹசாரே. ஆனால் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருந்த நேரத்தில், அவருடைய பெயரைப் பயன்படுத்தாதபோதும், என் பெயரைப் ஆப் கட்சி பயன்படுத்தக்கூடாது என்று ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்து கொண்டிருந்தவர் ஹசாரே. அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற தன் முடிவு தவறு என்ற குற்ற உணர்வு அவரை வருத்திக் கொண்டிருக்கலாம். கேஜ்ரிவால் தன்னைவிட மேலே போய்க்கொண்டிருப்பது கண்டு பொறுமிக்கொண்டிருக்கலாம். லோக்பால் சட்டத்துக்காக மற்றொரு உண்ணாவிரதம் ஆரம்பித்ததும், இத்தனைகாலமும் அவர் எதிர்த்துக்கொண்டிருந்த பல்லில்லாத லோக்பால் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட உடனே மகிழ்ச்சிக்கூத்தாடியதும் ஹசாரேவின் பொறுமலையே காட்டுகின்றன. கேஜ்ரிவால் துரோகம் செய்துவிட்டார் என்று கூறுபவர்கள் இதையெல்லாம் கவனிக்கத்தவறுகிறார்கள்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஆப் கட்சி தொடர்ந்து மக்கள் மத்தியில் பணியாற்றி வந்தது. உதாரணமாக, சேரிகளை இடிக்க அரசு இயந்திரம் முயன்றபோது களத்தில் இறங்கி எதிர்த்து நிறுத்தினார் கேஜ்ரிவால். மின்கட்டணம் செலுத்தவில்லை என்று இணைப்புகளைப் பிடுங்கியபோது, எதிர்ப்பைக் காட்டும் விதமாக சட்டத்தை மீறி இணைப்பைக் கொடுத்தார். அவருடைய போராட்டங்களில் காவல்துறை அவரை எப்படி நடத்தியது என்பதையெல்லாம் ஊடகங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருந்தும் ஆப் கட்சி நகரின் மூலை முடுக்கெல்லாம் தீவிரமாக இயங்கியது என்றால், மக்கள் மத்தியில் அதற்கு இருந்த ஆதரவே காரணம். எளிமையும் அணுகும் நிலையில் இருந்ததும் இன்னும் மதிப்பை ஏற்படுத்தியது. (ஏசி இல்லாத சாதாரண மாருதி 800 காரில் முன்சீட்டில் பயணிப்பதை நானே பார்த்திருக்கிறேன்.)

ஆப் கட்சியில் இருப்பவர்கள் அத்தனைபேரும் உத்தமர்கள் என்று நானும் நம்பத் தயார் இல்லைதான். ஆப் கட்சிக்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவும், தில்லி தேர்தல் முடிவுகளை எதார்த்த நிலையில் மதிப்பிடவும் தில்லியின் டெமோகிராபி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விளக்கமாக இங்கே எழுதத் தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால், படித்த நடுத்தர வர்க்கம் ஓரளவுக்கும், உழைக்கும் வர்க்கமும் இளைய சமூகமும் பெருமளவுக்கும் ஆப் கட்சியின் பின்னால் நின்றது.

பாஜக, காங்கிரசின் பணச்செழிப்பான விளம்பர உத்திகளுக்குப் பதிலாக நவீன, சிக்கனமான உத்திகளைப் பயன்படுத்தியது. தலைவர்-தொண்டர் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அணிந்த தொப்பி. ஆட்டோக்கள் அனைத்திலும் பின்னால் விளம்பரப்பலகைகளை காசு வாங்கமலே மாட்டியனார்கள் ஆட்டோக்காரர்கள். தெருவோரக் கூட்டங்கள், பாடல்கள், உண்டியல் குலுக்கல். தில்லிக்கு வருகிற தொலைதூர ரயில்களில் பயணம் செய்கிற பயணிகள் மத்தியில்கூட ஆப் கட்சி பிரச்சாரம் செய்தது.

காங்கிரசையும் பாஜகவையும் கடுமையாகச் சாடியே ஆப் கட்சி பிரச்சாரம் செய்தது. மும்முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து அவருடைய தொகுதியிலேயே கேஜ்ரிவால் போட்டியிட்டும்கூட, காங்கிரசின் டம்மிதான் ஆப் கட்சி என்று பாஜக பிரச்சாரம் செய்தது. இந்தத் தேர்தலிலும் இரண்டு தேசியக் கட்சிகளும் பணத்தை அள்ளி வீசின. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கும் பாஜகவும் காங்கிரசும், ஆப் கட்சிக்குக் கிடைத்த நிதி குறித்தும்கூட குற்றம் சாட்டின. தனக்குக் கிடைத்த நிதி குறித்த விவரங்கள் அனைத்தையும் ஆரம்பம் முதலே பகிரங்கப்படுத்தி வந்தது ஆப் கட்சி. அத்தனையும் மீறித்தான், ஒற்றை ரூபாய்கூடக் கொடுக்காமல்தான் ஆப் கட்சி இத்தனை இடங்களைப் பெற்றுள்ளது.

வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்னதாக ஆப் கட்சியின் பெயரைக் கெடுப்பதற்காக வேட்பாளர்கள் குறித்து பொய்யான ஸ்டிங் ஆபரேஷன் வீடியோக்கள் முளைத்தன. இதன் காரணமாக ஏற்பட்ட தொய்வால்தான் எங்கள் தொகுதி வேட்பாளர் வெறும் 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். இல்லையேல் இன்னும் சில தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கும்.

எது எப்படியோ, ஆப் கட்சிக்கு 28 தொகுதிகள் கிடைத்தன. காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத்தன. பாஜகவுக்கு 31, கூட்டணிக்கு 2 என 33 தொகுதிகள் கிடைத்தன. சுயேச்சை ஒரு தொகுதியில் வென்றார். இன்னும் 2 சுயேச்சைகள் வென்றிருந்தாலும் போதும், அவர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைத்திருக்கும் பாஜக. (ஆப் கட்சியின் சிலருக்கு வலைவீசிப் பார்த்தது என்பதும் அதிகம் வெளியே வராத செய்தி.)

பாஜக-வை ஆட்சி அமைக்க அழைத்தார் லெப். கவர்னர். தான் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாகத் தெரிவித்தது பாஜக. காங்கிரஸ் ஆதரவுடன் ஆப் கட்சி ஆட்சி அமைக்கட்டுமே என்றது பாஜக. அது எதற்கு, பாஜக-காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள்தானே, நீங்களே கூட்டுசேர்ந்து ஆட்சி அமையுங்களேன் என்றது ஆப் கட்சி. காங்கிரசிடம் ஆதரவு கோர மாட்டேன் என்றார் கேஜரிவால். நாங்கள் தருவதாகச் சொல்லவில்லையே என்றார் ஷீலா தீட்சித். இதுதான் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளின் நிலவரம்.

காங்கிரஸ் வெளியிலிருந்து நிபந்தனையின்றி ஆதரவளித்தால் ஆப் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று அப்போதே நான் எழுதினேன். இதையே ஆப் கட்சியின் பேஸ்புக் பக்கத்திலும் எழுதிவந்தேன். காரணம் என்ன? இப்போது எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காவிட்டால், மறு தேர்தல் வரும். அப்போது காங்கிரஸ் நிச்சயமாக இதே போல பின்னடைவே காணும். ஆனால் பாஜக இன்னும் பணத்தை அள்ளி வீசும். எந்தெந்தத் தொகுதியின் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் தனக்கு வாக்குகள் குறைந்தன என்பதை வைத்து, அங்கே மிரட்டியோ, பணத்தைக் காட்டியோ வாக்குகளை விலைக்கு வாங்கும். ஆப் கட்சியின் வெற்றி இதைவிடக் குறையும். முதல்முறையாக இத்தனை இடங்களைப் பிடித்த பிறகு, எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கிற நேரத்தில், அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நல்லாட்சி தர முயன்று செய்து காட்ட வேண்டும். இதுதான் என் மதிப்பீடாக இருந்தது.

அதே நேரத்தில்தான், ஆப் கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சி தானாகவே கவர்னருக்கு கடிதம் எழுதியது. மறுதேர்தலில் காங்கிரசுக்கு உள்ள அச்சம் குறித்து மேலே குறிப்பிட்டதே இதன் காரணமாக இருக்க முடியும். அத்துடன், காங்கிரஸ் மத்தியத்தலைமை நிர்ப்பந்தம் தந்திருக்கலாம்.

தன் கடமையின்படி, இரண்டாவது பெரிய கட்சியை - ஆப் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் கவர்னர். அப்போது ஆப் கட்சி சாதுர்யமாக ஒரு கடிதம் எழுதியது. நிபந்தனையற்ற ஆதரவு என்ற ஒன்று இருக்கவே முடியாது. எனவே, 18 கேள்விகளை இரண்டு கட்சிகளுக்கும் எழுதியிருக்கிறோம். அதன் பதில் கிடைத்ததும், மக்கள் மன்றத்தில் வைத்து முடிவு செய்து தெரிவிக்கிறோம் என்றது. (இது குறித்து ஏற்கெனவே பதிவில் எழுதியிருக்கிறேன்.) பாஜக-காங்கிரஸ் இரண்டுமே இதற்கு பதில்கூற இயலாமல் திணறின. எனவேதான், ஆட்சி அமைக்காமல் நழுவப்பார்க்கிறது ஆப் கட்சி என்று பாஜக கூறியது. 33 இடங்களைப் பெற்ற பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டு, ஆப் கட்சி நழுவப்பார்க்கிறது என்று கூறுவதைத்தான் இரட்டைநாக்கு என்று கூறவேண்டியதாகிறது.

ஆப் கட்சியின் சார்பில் 28ஆம் தேதி முதல்வர் ஆக இருக்கிறார் கேஜ்ரிவால். அமைச்சர்கள் பட்டியலும் அளித்தாயிற்று. 3ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். காங்கிரஸ் என்ன செய்யும் என்று இன்னும் உறுதியாகத் தெரியாது. காங்கிரஸ் ஆதரவு அளித்தால்தான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் பயமெல்லாம் வர இருக்கிற நாடாளுமன்றத்தேர்தல்தான். எனவே, இப்போதைக்குத் திரும்பப்பெற முடியாத, சற்றே கைவிட்டால் பாஜகவிடம் போய்விடக்கூடிய, தில்லியை கைவிடுவதே காங்கிரசுக்கு வசதியான விஷயம்.

எனவே, காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாலேயே ஆப் கட்சி அதன் சொல்படி ஆடும் என்று இப்போதே ஊகிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஆட்டுவிக்கும் நிலையில் காங்கிரசும் இல்லை என்பதையும் மறக்கத் தேவையில்லை. முந்தைய ஆட்சியின் ஊழல்களை விசாரிக்குமா என்பது தேவையற்ற கேள்வி. வரலாற்றில் இதுபோல எத்தனை புதிய அரசுகள் முந்தைய ஆட்சி குறித்து விசாரித்து அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறது. இனி எப்படிப்பட்ட ஆட்சி தரப்போகிறார்கள் என்று பார்ப்பதே முக்கியம்.

ஆப் கட்சி சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால், 4 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிக்கும் ஆர்.கே.புரம் தொகுதியில் ஒரு முஸ்லீமை நிறுத்தியிருக்க மாட்டார்கள். தவிர, பஞ்சாபிகளோ இதர சமூகமோ வலுவாக இருக்கும் தொகுதியில் ஆப் கட்சி வேட்பாளர் அந்த சமூகத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடாதா என்ன...

ஓர் ஊழல் கட்சியிலிருந்து பிரிந்து வந்த கட்சியாக இருந்தால்தான் அதை ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொல்ல முடியும். இது புதிய கட்சி. அதை மதிப்பிடுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

அனுபவம் அற்றவர்கள், அரசியல் தெரியாதவர்கள் என்றெல்லாம் சிலர் கூறுகிறார்கள். விடுதலைக்கு முன்பு நம் எல்லாரையும் பிரிட்டிஷார் இப்படித்தான் சொன்னார்கள். சாமானிய மனிதராக இருந்தவர்தான் காமராஜர் அல்லவா.

இதுவும் ஊழல் கட்சியாக மாறுமானால்.... அது அவ்வளவு சுலபமில்லை என்பது என் மதிப்பீடு. அப்படி நிகழ்ந்தால், ஊழல் புரியும் பணபலமிக்க கட்சிகளைவிட படுபயங்கர வேகத்தில் இது சரியும். இது புரியாதவர்கள் அல்ல அந்தக் கட்சியில் இருக்கும் யோகேந்திர யாதவ் போன்றவர்கள்.

ஆப் கட்சி முன்வைத்திருக்கிற வாக்குறுதிகள் சில எளியவை. சில கடுமையானவை. உதாரணமாக, தண்ணீருக்கு பக்கத்தில் காங்கிரஸ் ஆளும் ஹரியாணா, முலாயமின் உத்திரப்பிரதேசத்தை நம்பியிருக்கிற தில்லியில், கோடைவரும்போதும் 700 லிட்டர் தண்ணீர் சாத்தியமா என்பது ஒரு கேள்வி. தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் தில்லியில், மின்கட்டணத்தை பாதியாகக் குறைக்க முடியுமா என்பதும் பெரிய கேள்விதான். அவற்றைப்பற்றி பிறிதொருநாள் பார்க்கலாம். ஆப் கட்சிக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒருவேளை ஆட்சி அமைத்துவிட்டாலும், 100 நாட்களுக்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும். புதிய வாக்குறுதிகளையோ, புதிய சலுகைகளோ அளிக்க முடியாது.

ஆப் கட்சிக்கு இருக்கிற மற்றொரு சிக்கல், ஊடகங்கள். காலம்காலமாக பணமுதலைகளின் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஊடகங்கள் ஆப் விஷயத்தில் எச்சரிக்கையாகவே இருக்கும். முடிந்தவரை அதனுடைய சிறு பின்னடைவைக்கூட பெரிதுபடுத்திக்காட்டவே முனையும். உதாரணமாக, பின்னி என்பவர் அமைச்சர் ஆகாதது குறித்து ஆப் கட்சிக்குள் விரிசல் என்று ஊடகங்கள் பரப்பிய செய்தி. இதையும் எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது ஆப் கட்சி.

நான் ஆப் கட்சிக்காரன் இல்லை. மாற்றத்தை எதிர்பார்த்து அதற்கு வாக்களித்தேன். அவ்வளவே. என் எதிர்பார்ப்புகள், நடைமுறை தெரிந்த எதிர்பார்ப்புகள் மட்டுமே. ஆனால், ஊழல் அரசியல் என்ற கசப்புணர்வில் ஊறிப்போனவர்கள் நாம் என்பதாலேயே இவர்களையும் உடனே கண்மூடித்தனமாக விமர்சிக்கவோ, தாக்கவோ தேவையில்லை. அப்படித் தாக்குகிறோம் என்றால், ஊழல் கட்சிகளின் கரத்தையே மறைமுகமாக நாமும் வலுப்படுத்துகிறோம். இத்தனை காலம் ஊழல் ஆட்சிகளை தாங்கிக் கொண்டவர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க முடியாதா என்ன... 

Saturday 21 December 2013

புன்னகை


அது புன்னகை என்பதாலோ
புன்னகைத்த முகம் பரிச்சயமாய் இருந்ததாலோ
இதழ்விரியத் தெரிந்த பல்வரிசையாலோ
புன்னகைத்த இதழ்களுக்கு மேலும் விரிந்து
கண்ணும் நகைத்ததாலோ
கண்கள் நேராயென் கண்நோக்கியதாலோ...

ஏதாகிலும் இருக்கட்டும்,
எதற்கிந்த ஆராய்ச்சி.
மனதில் படிந்திருக்கும்
புன்னகையின் எச்சம் போதுமாயிருக்கிறது
இன்றைய காலையின் என் புன்னகைக்கு.

* * *

உனது ஒரு புன்னகையில்
வீழ்ந்து கிடக்கிறேன்.
மீண்டெழச் செய்யேன்
மற்றொரு புன்னகையால்.

* * *

உன்னிடம் யாசித்ததெல்லாம்
ஒற்றைப் புன்னகைதானே?
எதற்காக இன்னும் நீ
இத்தனை யோசிக்கிறாய்?

* * *

ஒற்றைப் புன்னகைதானே
உன்னிடம் கேட்டேன்.
புன்னகைப் பூக்களால்
மாலையை அளிக்கிறாய்...!

* * *

கண்ணுக்கு அழகானதாய்
ஆயிரம் புன்னகைகள்
மனதுக்கு இதமாயிருப்பதோ
உன் ஒற்றைப் புன்னகைதான்.

* * *

உன் ஒற்றைப் புன்னகையில்
உலகின் ஒளி கூடுகிறது
இன்னும் அழகாகிறது
இன்னும் ஒளிக்கும் அழகுக்கும்
என்னை ஏங்கச் செய்கிறது.

* * *

உன் புன்னகைப் பூக்களில்
மயங்கிக் கிடப்பவனை
எழுப்ப வேண்டாமா...
கொஞ்சம் புன்னகை தெளியேன்.

* * *

ஒரு புன்னகை பிறப்பதற்கு
ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்.
ஆனாலும்
ஒரு புன்னகை போதுமாயிருக்கிறது
ஓராயிரம் பிரச்சினைகளை மறக்க.

எனக்குப் பிடித்தமாயிருப்பது
காரணங்கள் அல்ல, புன்னகைதான்.

* * *

ஒரேயொரு புகைப்படத்தில்
உறைந்திருக்கும் ஒற்றைப் புன்னகை
போதுமாயிருக்கிறது
உறைந்துபோன ஒருநூறு முகங்களில்
புன்னகை பூப்பதற்கு.

* * *

அச்சம் தவிர் .
ஏறுபோல் நட.
ரௌத்திரம் பழகு.
குன்றென நிமிர்ந்து நில்.
செய்வது துணிந்து செய்.
...
கூடவே கொஞ்சம்
புன்னகை புரிந்திடு.

* * *

உன் புன்னகைக்கு
எத்தனையோ பொருள்களிருக்கலாம்.
நான் எடுத்துக்கொள்கிறேன்
எனக்கே எனக்கான ஒன்றை மட்டும்.

* * *

உன் புன்னகைக்கு இருக்கலாம்
ஒருநூறு காரணங்கள்.
என் முகத்தின் புன்னகைக்கோ
உன் ஒற்றைப் புன்னகைதான்.

* * *

புரியாதவர்கள் கேட்கிறார்கள்
புன்னகைக்கு என்ன வி்லையென்று
புன்னகை புடலங்காயில்லை என்று
புரிய வையேன் இவர்களுக்கு
மற்றொரு புன்னகையால். 

* * *

புன்னகைக்குச் சொந்தக்காரர் யாரென்ற
புதிரை அவிழ்க்கச் சொல்கிறீர்கள்.
என் புன்னகை கண்டபின்னுமா புரியவில்லை
எனக்காகப் பிறந்த புன்னகைகள்
எனக்கு மட்டுமே சொந்தமென்று.

* * *


Tuesday 3 December 2013

தில்லி தேர்தல்

நாளை தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு. மொத்தம் 70 தொகுதிகள்.

15 ஆண்டுகளுக்கு முன்பு வெங்காய விலை உயர்ந்து, மக்களின் அதிருப்திப்புயலில் பாஜக அரசு அடித்துச் செல்லப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இப்போது சக்கரம் முழுச்சுற்று சுற்றிவிட்டு மீண்டும் அதே வெங்காய விலையில் வந்து நிற்கிறது.
முந்தைய இரண்டு தேர்தல்களிலும் பாஜக ஆனமட்டும் முயற்சி செய்தும் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. இன்றில்லையேல் என்றும் இல்லை என்ற நிலையில் இந்த முறை தீவிரமாக இறங்கியிருக்கிறது.
புதிதாகப் பிறந்த சாமானிய மக்கள் கட்சி - ஆம் ஆத்மி பார்ட்டி (ஆப் கட்சி), மேற்கண்ட இரண்டுக்கும் கடும் போட்டியாகத் தலைதூக்கியிருக்கிறது.
இதுதவிர மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் 21 தொகுதிகளில், தேதிமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

பிஎஸ்பி, என்சிபி ஓரிரு தொகுதிகளில் வெல்லலாம். கம்யூனிஸ்ட் வாய்ப்பு மிக அரிது. தேதிமுக.... சொல்லவே தேவையில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அடுத்த தெருவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதை பிரச்சாரம் என்று சொல்ல வேண்டுமானால் பிரச்சாரம் என்றால் என்ன என்பதன் பொருளையை புதிதாக எழுத வேண்டும். அதை விடுங்கள்.

தமிழ்நாட்டுத் தேர்தலில் பணம் விளையாடுவது குறித்து நிறைய நண்பர்கள் பதிவு எழுதுவதுண்டு. தில்லி சற்றும் குறைந்ததல்ல. பாஜகவிடமிருந்து ஒரு வாக்குக்கு 1000 ரூபாய் தருகிறோம் என்று வீடு தேடி வந்தது வாய்ப்பு. காங்கிரசும் இதேபோல அளித்திருக்கும், என் வீட்டுக்கு வரவில்லை என்பதுதான் வித்தியாசம். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் பகுஜன் சமாஜ் கட்சி பணவிநியோகம் செய்வதைப் பெறுவதற்காக நீண்டவரிசையே காத்திருந்தது. நேற்று சந்தித்த நண்பர் ஒருவர், பாஜக ஏஜென்டுகள் பாட்டில் விநியோகம் செய்ய முன்வந்ததையும் தான் வேண்டாம் என்று மறுத்ததையும் தெரிவித்தார். ஆக, இதுதான் இப்போது நேஷனல் ஃபினாமினா.

தமிழர்கள் நிறையப்பேர் வசிக்கும் சேரிப்பகுதிகளில் இதுவரை பணம் யார் கைக்கும் போய்ச்சேரவில்லை. சாராயம் மட்டுமே கிடைத்திருக்கிறது என்று மிகவும் வருந்தினார்கள். சிலருக்கு புடவை வேட்டிகள் கிடைத்தன. ஆனால் ரொக்கம் கிடைக்கவில்லை. அங்கே இருக்கும் குட்டித்தலைகள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறார்கள். (சேரிப்பகுதிகளை ஜேஜே காலனி என்பார்கள். தில்லிக்கு வந்த புதிதில் அட, ஜெயலலிதாவின் பெயரால் தில்லியில் இத்தனை காலனிகளா, அவருக்கு இவ்வளவு செல்வாக்கா என்று வியந்துபோனேன். பிறகுதான் தெரிந்தது, அது ஜுக்கி-ஜோப்டி Juggi Jhopdi காலனிகள் என்பதன் சுருக்கம் என்று.)

எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்குகள் இலட்சத்தைத் தாண்டியதில்லை. வெற்றி பெற்றவருக்குக் கிடைத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 27500, அதிகபட்சம் 64500. (கவனிக்கவும் - இது வாக்கு வித்தியாசம் அல்ல, வெற்றி பெற்றவருக்குக் கிடைத்த வாக்குகளே இவ்வளவுதான்) ஆக, மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இங்கே சகஜம்.

2008 தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு விகிதம் - காங்கிரஸ் 40, பாஜக 36, பகுஜன் சமாஜ் 14. 2003 தேர்தலைவிட கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 4 சதவிகித வாக்குகள் குறைந்தன, அதன் விளைவாக, கிடைத்த இடங்களின் எண்ணிக்கையும் 47இலிருந்து 43 ஆகக் குறைந்தன. பாஜக-வுக்கு 3 சதவிகிதம் உயர்ந்தது, 3 இடங்கள் அதிகம் பெற்று, 23 தொகுதிகள் கிடைத்தன.

தில்லி தேர்தல் முடிவுகள் எப்படி மாறக்கூடும் என்பதை மேற்கண்ட இரண்டு பத்திகளும் உதாரணமாகக் காட்டுகின்றன.

மின்கட்டணம் குறைப்போம், விலைவாசியை கட்டுப்படுத்துவோம், அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம் அளிப்போம், ஆண்டுக்கு 12 எல்பிஜி சிலிண்டர்கள், தில்லிக்கு மாநில அந்தஸ்து, என்பவை பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்.
அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம், தெரு வியாபாரிகளுக்கு தனி சந்தை, உணவுப்பாதுகாப்பு, ஏழைகளுக்கு வீடுகள் ஆகியவை காங்கிரஸ் வாக்குறுதிகள்.
மின்கட்டணம் குறைப்பு, ஏழைகளுக்கு இலவச குடிநீர், ஊழல் ஒழிப்புக்கு ஜன் லோக்பால், ஏழைகளுக்கு வீடுகள் போன்றவை தவிர, அந்தந்தத் தொகுதிக்கென தனி தேர்தல் வாக்குறுதிகளும் முன்வைக்கிறது ஆப் கட்சி.

மின்கட்டணம் குறைப்பு என்பது எவராலும் சாத்தியப்படாது. தில்லியில் தடையற்ற மின்சாரம். அதிக விலை கொடுத்து வாங்கி குறைந்தவிலைக்கு சப்ளை செய்கிற விஷயம். அதிகபட்சமாக, சுமார் 5-10 சதவிகிதம் குறைக்கலாம். தலைநகராக இருப்பதால், முழு மாநில அந்தஸ்து எக்காலத்திலும் சாத்தியமில்லை. இவை நிரந்தர வாக்குறுதிகளாக இருக்கும். அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம் என்பது அந்தந்த காலனி மக்களை இழுக்கும். பொதுவான ஆதரவுக்கு உரியது அல்ல.

பேருந்து வசதிகள், சாலைவசதிகள் மேம்படுத்தியதும் தடையற்ற மின்சாரமும் காங்கிரசின் சாதனைகள். ஆக, விலைவாசி உயர்வும் ஊழலும் முக்கிய அம்சங்கள். விலைவாசிப் பிரச்சினை நாடெங்கும் இருக்கிற பிரச்சினை, மாநில அரசின் கையில் இல்லை. பாஜக, காங்கிரஸ் இரண்டுமே ஊழலை ஒழித்துவிடும் என்பதெல்லாம் பகல்கனவுதான். இந்த இடத்தில்தான் ஆப் கட்சி முக்கியத்துவம் பெறுகிறது.

விலைவாசி உயர்வு காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு. இதன் விளைவான அதிருப்தி வாக்குகள் பாஜக-வுக்குச் சேர வேண்டும். ஆனால் இங்கேதான் குறுக்கே நிற்கிறது ஆம் ஆத்மி பார்ட்டி. இந்த இரண்டு கட்சிகளையும் பல ஆண்டுகளாகப் பார்த்து விட்டீர்கள். ஒரு மாற்றத்துக்காக எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள் என்கிறது ஆப் கட்சி.

படித்த, நடுத்தர மக்கள் மத்தியில் ஆப் கட்சிக்கு ஆதரவான மனநிலை இருக்கிறது. நான் பேசிய பலரும், இந்த முறை ஆப் கட்சிக்கு வாக்களிக்கலாமா என்று யோசிக்கிறேன் என்று என்னைப்போலவே பதிலளித்தார்கள். விந்தை என்னவென்றால், கீழ்த்தட்டு மக்களிடமும் ஆப் கட்சிக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. அதன் தொண்டர் படையில் பெரும்பகுதி கீழ்த்தட்டு மக்களும் ஆட்டோக்காரர்களும்தான்.

இதுவரை வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகள் எல்லாம் அவரவர் விருப்பத்தையும் சார்பையும் பொறுத்து ஆப், காங்கிரஸ், பாஜக - மூன்றுக்கும் வெற்றி வாய்ப்பைக் காட்டுகின்றன. ஆனால் இவை எதுவுமே சரியாக இருக்கப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.

காங்கிரஸ் வெறுப்பு வாக்குகள் பிஜேபிக்குப் போக வேண்டியவை இந்த முறை ஆப் கட்சிக்குப் பிரியும். 15 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாதிருந்தாலும் மாநகராட்சித் தேர்தல்களில் தன் வலுவைக் கட்டமைத்துக்கொண்டே வந்திருக்கிறது பாஜக. இதற்கு முக்கிய வாக்கு வங்கிகளாக இருப்பவை சேரிப்பகுதிகளும் பின்தங்கிய பகுதிகளும்தான். ஆனால் இந்த முறை பல தொகுதிகளில் தேதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகள் அந்த வாக்குகளையும் பிரிக்கும். ஆக, மும்முனைப் போட்டியால் பாதிக்கப்படப் போவது காங்கிரசும் பாஜகவும்தான்.


ஷீலா தீட்சித், அர்விந்த் கேஜ்ரிவால் இருவரும் அறியப்பட்ட அளவுக்கு பாஜகவின் ஹர்ஷவர்தன் அறியப்பட்டவர் அல்ல. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் குளறுபடியும் செய்தது பாஜக. இதுவும் கொஞ்சம் பாஜகவை பாதிக்கக்கூடும். 

இறுதியாக என்ன நடக்கலாம்... யார்தான் அனுமானிக்க முடியும். எனக்குத் தோன்றுவது, காங்கிரஸ் மயிரிழையில் ஆட்சியைப் பிடிக்கலாம். அல்லது ஆப் கட்சி கணிசமாக இடங்களைப் பிடித்தால் காங்கிரசுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். தொங்குநிலைமை ஏற்படும் என்றே தோன்றுகிறது. அதற்குப் பிறகு என்னவாகும் என்பதையே இப்போது யோசிக்கத் தோன்றுகிறது.


Sunday 17 November 2013

சச்சினுக்கு பாரத ரத்னா சரிதானா...


இப்போது இந்தக் கேள்வியே ஒருவகையில் அர்த்தமற்றது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாகிவிட்டது. இனி கேட்டுப்பயனில்லை என்றும் கூறலாம். அல்லது, இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால்தான் இனிமேல் கவனமாக இருப்பார்கள் என்றும் கூறலாம்.

விருதுக்கு இந்தியர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று இல்லை. பிரதமரின் பரிந்துரையின்பேரில் உலகின் எந்தப் பகுதியில் இருப்பவருக்கும் தரலாம். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கானுக்கும், நெல்சன் மண்டேலாவுக்கும் தரப்பட்டது இப்படித்தான்.

பாரத ரத்னா என்பது நாட்டின் மிக உயரிய விருது. 1955இல் நிறுவப்பட்டது. அப்போதைய முடிவின்படி, காலமானவர்களுக்கு இந்த விருது தரப்படாது என்று முடிவாகியிருந்தது. 1966இல் இந்த விதி மாற்றப்பட்டது. அபுல் கலாம் ஆசாத் அரசுப் பொறுப்பில் இருக்கும்போது அவர் பெயர் தேர்வுசெய்யப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். 1992இல் தேசிய முன்னணிக்கு அடுத்து வந்த காங்கிரஸ் அரசு அபுல் கலாம் ஆசாதுக்கு விருது அளித்தது.

இந்த விருதில் அரசியல் அல்லது நிர்ப்பந்தம் எப்போது கலந்தது? 1987 வரை விருது அளிக்கப்பட்டவர்கள் கல்வி, அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் சேவை செய்தவர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. 1988இல் எம்ஜிஆருக்கு விருது அளிக்கப்பட்டதிலிருந்து அரசியல் தொடங்குகிறது. 1984 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி இருந்தது. எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு விருது தர மத்திய அரசு முடிவு செய்தது. 1989 தேர்தலில் அதே கூட்டணி தொடர்ந்தது. திமுக ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாமல் துடைத்தெறியப்பட்டது.

இப்படிச் சொல்வதால், 1988க்குப் பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டவர்கள் எல்லாருமே அரசியல் காரணங்களுக்காகவே வழங்கப்பட்டவர்கள், தகுதி அற்றவர்கள் என்பதாகக் கருதிவிடக் கூடாது. நெல்சன் மண்டேலா விடுதலை ஆகிற கட்டத்தில் அவருக்குத் தரப்பட்டது இதற்கு உதாரணம். தேசிய முன்னணி அரசின்போது அம்பேத்கருக்குத் தரப்பட்டதும், அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்திக்குத் தருகிறபோது, படேலுக்கும் தரப்பட்டதும் அரசியலானதன் உதாரணம்.

ஆக, விருதுகள் தகுதியுள்ளவர்கள் என்பதால் மட்டுமல்ல, நிர்ப்பந்தங்களின் காரணமாகவும் அளிக்கப்பட்டன. அழுதபிள்ளைக்குப் பால் கிடைக்கும் என்பது போல. 2001இல் லதா மங்கேஷ்கருக்குத் தரப்பட்டது, பி. சுசீலாவுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இளையராஜாவுக்கு இன்னும் தரவில்லையே என்று தமிழர்கள் பலருக்கும் குறையாக இருக்கிறது.

இப்படி கிடைக்காதவர்கள் பெயர்களைப் பட்டியலிடுவது மிகச் சுலபம். ஏன் என்றால், இந்தியாவில் திறமை வாய்ந்தவர்கள் ஏராளம். இன்னும் விருது வழங்கப்படாத சீர்திருத்தச் செம்மல்கள், விஞ்ஞானிகள் அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். பட்டியலிடுவதும் சாத்தியமில்லை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், பெரியார், ஹோமி பாபா, கேப்டன் லட்சுமி, சுந்தர்லால் பகுகுணா என எத்தனையோ பேரைக் குறிப்பிடலாம். இந்திய வேதியியல் தொழில்துறையின் தந்தையும்கல்விக்கே தன் வாழ்க்கையையும் சேமிப்பையும் முழுவதையும் அர்ப்பணித்த பிரபுல்ல சந்திர ரே - அவருக்கே இந்த விருது தரப்படவில்லை. அதற்காக, அரசியல் அல்லது வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக எல்லாரையும் திருப்திப்படுத்த பட்டாணிக்கடலை விநியோகிப்பது போல விருதுகளை வழங்கினால் அப்புறம் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதுக்கு இருக்கிற மரியாதைதான் அதற்கும் இருக்கும்.

இந்த விருதுக்கு யார் தகுதி உடையவர்கள்.... கலை, இலக்கியம், அறிவியல், மக்கள் சேவை ஆகியவற்றில் மகத்தான பங்காற்றியவர்களுக்கு பாரத ரத்னா விருது தரலாம் என்பதுதான் ஆரம்பத்தில் விதியாக இருந்தது. தேசிய விளையாட்டான ஹாக்கியின் பிதாமகன் தியான்சந்துக்கு இந்த விருதை தர வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் கருதிய அதே நேரத்தில், 2011இல், சச்சினுக்கும் தர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. எனவே விதிகள் மாற்றப்பட்டன.

விளையாட்டும் இதில் சேர்க்கப்பட்டது என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் விளையாட்டும் இதில் சேர்க்கப்படவில்லை. மாறாக, எந்தத்துறைக்கும் வழங்கலாம் என்று விதி மாற்றப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.
It is awarded in recognition of exceptional service/performance of the highest order in any field of human endeavour.

அதாவது, இனிவருகிற காலத்தில் எவருக்கு வேண்டுமானாலும் இந்த விருது வழங்கப்படலாம். இந்தத் திருத்தம், மேலும் அரசியலாவதற்கே வழி வகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுகுறித்தே நாம் கவலைப்பட வேண்டும். அல்லது சச்சினுக்குக் கிடைத்ததில் சந்தோஷப் படுவதுபோல சந்தோஷப்பட பழகிக்கொள்ள வேண்டும்.

சச்சினுக்கு இந்த விருது தருவது அவசியமில்லை என்று நான் ஏன் கருதுகிறேன். சச்சின் மீது வெறுப்பா.... நிச்சயமாக இல்லை. கிரிக்கெட்டில் அவர் சாதித்தது நிறைய. அதில் சந்தேகமே இல்லை.  குற்றம் கண்டுபிடித்துப் பெயர் வாங்குவதா? இல்லை, வலைப்பதிவு எழுதி அப்படி என்ன பெயரும் புகழும் கிடைத்துவிடப்போகிறது. அதுவல்ல விஷயம்.

சச்சினுக்கு விருது வழங்குவதை கேள்வி கேட்டால் அதிருப்தி அடைகிறவர்கள் அடிப்படையான ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள் --- விளையாட்டுத் துறைக்கென தனியாக நாம் விருதுகளை வழங்கி வருகிறோமே, பின் இதையும் அவர்களுக்கே ஏன் வழங்க வேண்டும் என்பதே என் கேள்வி. விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருது கேல் ரத்னா - விளையாட்டு ரத்தின விருது. அத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

இந்தக் கேள்வி மேலும் சில துணைக்கேள்விகளை எழுப்புகிறது. அப்படியானால் இலக்கியம், கலை போன்ற துறையினருக்கும் தர வேண்டாமே? ஆம், தர வேண்டியதில்லை. (இலக்கியத்துக்கு இதுவரை யாருக்கும் பாரத ரத்னா தரப்பட்டதில்லை.) இலக்கியத்துக்கு சாகித்ய அகாதமி இருக்கிறது. கலைக்கு சங்கீத நாடக அகாதமி விருது இருக்கிறது. திரைப்படத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது இருக்கிறது. அவர்களுக்கே இந்த விருதையும் தர வேண்டிய அவசியம் இல்லை. இவை தவிர, எல்லாத் துறைகளுக்கும் தரப்படுகிற பத்ம விருதுகளும் நிறையவே உண்டு.


எனவே, பாரத ரத்னா விருதை நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டுமே என்று விதிக்க வேண்டும். இல்லையேல் இன்று எழுப்பப்படுகிற அதே கேள்விகள் ஒவ்வொரு ஆண்டும் எழுவதைத் தவிர்க்க முடியாது.

Wednesday 6 November 2013

தங்கிலீசு வேணுமோ தங்கிலீசு....


இரண்டு நாட்களுக்கு முன்பு, காலையில் பேஸ்புக் திறந்ததும் வா. மணிகண்டன் தங்கிலீஷில் இரண்டு வரிகள் எழுதியிருந்ததைப் பார்த்தேன். பொதுவாகவே தங்கிலீஷ் படிக்க நேரும்போது எனக்கு பயங்கர கடுப்பாகி விடும். சிலருடைய செல்பேசிகளில் தமிழ் வசதி இருப்பதில்லை என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால், எப்போதும் இப்படிச் செய்யாத மணிகண்டன் இன்று இப்படி எழுதுகிறாரே என்று வியந்துபோய், இந்த விஷப்பரீட்சையில் இறங்காதீங்க என்று நான் கமென்ட் எழுதினேன். அப்போதுதான் அவர் சேதியும் இணைப்பும் அனுப்பினார், ஹிந்து தமிழ் இதழில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் எதிர்வினை அது என்று.

ஓஹோ... இன்றைய அஜெண்டாவை அவர்தான் முடிவுசெய்திருக்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன். ஹிந்து இதழில் வந்த கட்டுரையைப் படித்தேன்.

சற்று நேரத்திற்குப்பிறகு பார்த்தால், இந்தக் கட்டுரைக்கு என்ன எதிர்வினைகள் வரும் என்று தெரிந்தே தான் எழுதியதாக ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் ஒரு பதிவும் எழுதியிருக்கிறார். அதாவது, பத்திரிகையில் எழுதியது விவாதத்துக்கு உரிய விஷயமே அல்ல. அதைப்பற்றி மிகவும் சிந்தித்தே எழுதியிருக்கிறார், அவருடைய கருத்து முடிந்த முடிபு, இனி எந்த மாற்றமும் தேவையில்லை என்பதே அந்தப் பதிவின் நோக்கமாக இருக்க முடியும்.

அவர் அப்படிச் சொல்லி விட்டார் என்பதற்காக விவாதிக்காமல் இருந்துவிட முடியுமா..

அவருடைய கருத்தின் சாரம் என்ன...
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழ் வாசிக்கும் பழக்கம் அற்றுப் போகாமல் இருக்க ஆங்கிலத்தில் தமிழை எழுதலாம் என்பதுதான்.

இது ஏதும் புதிய கருத்தல்ல, புதிய விஷயமும் அல்ல. நாடு விடுதலை அடைந்தபோது, தேசிய மொழியாக எதை ஏற்பது என்ற கேள்வி வந்த காலத்தில், இந்தி தெரியாதவர்கள் ஆங்கில எழுத்து வடிவில் இந்தி எழுதலாம் என்ற வாதம்கூட வந்தது. இந்துஸ்தானிதான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. இப்போதும்கூட வடக்கே இந்தியிலும் இதுபோல அவ்வப்போது யாராவது கிளப்பி விடுவது உண்டு. சரி, அதை விடுத்து, விவரங்களைப் பார்ப்போம்.

இப்போதும்கூட இந்தியாவில் பல மொழிகள் ஆங்கில எழுத்து வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, காசி, கரோ, மிசோ போன்றவை. வேறு சில மொழிகளுக்கு இரண்டு விதமான எழுத்துகளும்கூடப் பயன்படுகின்றன. கொங்கணியை இந்தியிலும் - அதாவது தேவநாகரியிலும் எழுதுவதுண்டு, கன்னடத்திலும் எழுதுவது உண்டு. மணிப்புரியை வங்காளி வரிவடிவிலும் ஆங்கில வரிவடிவிலும் எழுதுவது உண்டு. பஞ்சாபில் சிலர் உருதுவை ஆங்கிலத்தில் எழுதுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பீகாரில் உருதுப் பத்திரிகைகள், இந்தி எழுத்துகளால் வெளிவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதையெல்லாம் அவர் ஏன் குறிப்பிடாமல் விட்டு விட்டார் என்பது புரியவில்லை. இருக்கட்டும்.

மேலே குறிப்பிட்ட காசி, மிசோ போன்ற மொழிகள் ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணங்கள் வேறு. ஆங்கிலேய மிஷினரிகளின் தாக்கமும் அதில் இருந்தது. அது பேசப்படுவதும்கூட மிகக் குறைவான மக்களால்தான். அவ்வளவு ஏன், சிந்தி மொழி பெர்சியன் (அதாவது, அரபி), தேவநாகரி, ஆங்கிலம் ஆகிய மூன்று எழுத்து வடிவங்களிலும் எழுதப்படுகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டு பழமையான சிந்தி மொழி இன்று குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் பேசப்படுவதில்லை. அதனால் சிந்தி மொழியினர் ஆங்கில வரிவடிவத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். அப்படியிருந்தும்கூட, சிந்திக்கு யுனிகோட் எழுத்துகள் உருவாக்கி விட்டார்கள்.

ஆக, எந்தெந்த மொழிகள் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றன என்று பார்த்தால், உலகின் ஏராளமான மொழிகள் வரும். ஆனால் அவை பெரும்பாலும் குறைந்த மக்கள் பேசுகிற மொழிகளாக இருக்கும். அல்லது வரலாற்றில் புதிய மொழிகளாக இருக்கும்.

இந்தியாவின் பெரும்பாலான பழங்குடி மொழிகள் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றன. காரணம், அவர்கள் மொழி பேச்சு மொழியாக மட்டுமே இருந்தது. எழுத்து மொழியாக வளரவில்லை. பிற்காலத்தில் நாகரிகத் திணிப்பின் அல்லது ஏற்பின் காரணமாக, அவர்களுக்கு புதிய வரிவடிவத்தை உருவாக்க முடியாதபோது, ஆங்கில வரிவடிவத்தை வரித்துக்கொள்வது எளிதாகி விட்டது. ஆனால், அவர்களால் முடியும் என்றால், நிச்சயமாக சொந்த வரிவடிவத்தை உருவாக்குவார்கள்.

மிகக் குறைவான மக்கள் பேசும் மொழியினர்கூட தமக்கென புதிய வரிவடிவத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்து புதிய எழுத்து வடிவங்களை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, சந்தாலி மொழிக்கான ஓல் சிக்கி. தமிழர்களில் பலர் இப்படியொரு பெயரையே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அப்படியொரு வரிவடிவம் இருக்கிறது. கூகுளில் தேடியறியலாம்.

இப்படி, குறைவான மக்களால் பேசப்படும் சந்தாலி மொழிக்கே சொந்த வரிவடிவம் உருவாகிக் கொண்டிருக்கும் காலத்தில், பல்லாயிரம் ஆண்டுகாலப் பழமை கொண்ட மொழிக்கு எதிர்காலத்தில் ஆபத்து வந்துவிடும் என்றும், ஆங்கில வரிவடிவைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுவது என்னவகையான மனநிலை என்று சத்தியமாகப் புரியவில்லை.

சரி, அப்படியே தமிழை ஆங்கிலத்தில் எழுதி விட்டாலும் வாசிக்க முடியுமா... தமிழ் எழுத்துகளின் ஒலிகளுக்கு நிகரான ஒலி ஆங்கிலத்தில் இல்லை. ஏன், இந்திய மொழியில் ஒன்றான இந்தியிலும்கூட இல்லை. விளம்பரங்களிலோ, திரைப்படப் பெயர்களிலோ ஒரிரு சொற்கள் ஆங்கிலத்தில் படித்துவிடுவது என்பது வேறு. அது அந்தந்தப் பொருள் சார்ந்த விஷயம். எல்லா தமிழ்ச் சொற்களையூம் ஆங்கில ஒலிமயமாக்கி எழுதுதல் சாத்தியமில்லை. ஒருவேளை இதற்கும் அவர் ஒரு தீர்வு சொல்லக்கூடும். ஆங்கிலத்தில் டயகிரிடிகல் Diacritical எழுத்துகள் இருக்குமே, அதைப் பயன்படுத்துங்கள் என்று சொல்வாரோ என்னவோ...

டயகிரிடிகல் என்பது ஒலிக்குறி வடிவம். ஆங்கிலத்தில் இல்லாத எழுத்துகளை குறிக்கப் பயன்படுகிறது. உதாரணமாக கஃபே என்பதற்கு cafe என்று எழுதுகிறோம். ஆனால் உண்மையில் அது café. ஆங்கில எழுத்துகளுக்கு மேலாகவோ கீழாகவோ சில குறிகளை இட்டு தமிழின் ன், ள், ழ் போன்ற எழுத்துகளுக்குப் பயன்படுத்துவார்கள். இவற்றை வாசிப்பது மொழியியல் வல்லுநர்களுக்கே திணறல்தான். இதைக் கற்றுக்கொள்வதைவிட ஒரு மொழியையே கற்றுக்கொள்ளலாம். இந்தப் பத்தியில் உள்ள வாதம் நிச்சயமாக விதண்டாவாதம்தான் என்று எனக்கே தெரியும். இருந்தாலும் இப்படிஎழுதியதன் காரணம், எதிர்வினை எப்படி வரும் என்று தெரிந்தவர் இதையும் ஊகித்தாரா என்று தெரிந்து கொள்வதுதான்.

சரி, இந்து இதழில் ஜெயமோகன் முன்வைத்த கருத்தின் சாரங்களைப் பார்ப்போம்.

1. //நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. //
அபத்தமான கருத்து. இளைய தலைமுறை வாசிக்கவில்லை என்பதே உண்மை. இளையதலைமுறையினர் நிறையபடிக்கிறார்கள் என்பது உண்மை - ஆனால் அது பாடப்புத்தகப் படிப்பு. நூல் வாசிப்பு அல்ல. இதற்குக் காரணங்கள் பல - செல்பேசிகளின் ஊடுருவலும், அதில் இசைகேட்கும் வசதிகளும், அண்மைக்காலத்தின் செல்பேசிகளில் பரவலாகி வி்ட்ட சமூக ஊடக வசதிகளும் சேர்ந்து வாசிப்பை அருகச் செய்திருக்கின்றன என்பதே உண்மை. ஓர் இலக்கியவாதியாக இருந்துகொண்டு எப்படி இப்படியொரு கருத்தைமுன்வைக்கிறார் என்று தெரியவி்ல்லை. நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன என்பதை வைத்து வாசிப்புப் பழக்கம் அதிகரித்திருக்கிறது என்று கருதக்கூடாது. சொல்லப்போனால், மிகச்சிலர் மிக அதிக நூல்களை வாங்குகிறார்கள். மிகப் பலர் மிகச்சில நூல்களையே வாங்குகிறார்கள். இது குறித்து உலகப்புத்தகத் திருவிழா குறித்த என் வலைபதிவில் பார்க்கலாம்.

2. //இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்றுசொல்லலாம்.//
பல்வேறு துறைகள் குறித்து ஆழமாக எழுதுகிறவராகக் கூறிக்கொள்பவர் எப்படி இப்படியொரு அபத்தமான கருத்தை முன்வைக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. குழந்தைகள் இரண்டு மொழிகளை அல்ல, நான்கு மொழிகளைக்கூட எளிதில் கற்கமுடியும் என்று ஆய்வுகள் பலவும் காட்டியிருக்கின்றன. கூகுளில் தேடினால் நிறையவே கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், இரண்டு மொழி பேசும் பெற்றோர் உள்ள குடும்பத்தின் குழந்தைகளுக்கு பலமொழித் திறன் எளிதாக வரும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. அவ்வளவு ஏன், இரண்டு மொழிகளைக் கற்றுக்கொண்டவர்களுக்கு அல்ஜெமிர் நோய் தாமதமாகவே வரும் என்றும்கூட ஆய்வுகள் காட்டுகின்றன. (மாதிரிக்கு, பதிவின் படத்தைப் பார்க்கவும்.)

3. மேற்கண்ட சிரமம்பற்றிய கருத்தைத் தொடர்ந்து வரும் பத்திகள் அனைத்தும் அதையொட்டிய கருத்தையே முன்வைத்துள்ளன என்பதால் ஒதுக்கி விட்டுகடைசிப் பத்திக்குச் செல்லலாம்.

4. // எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ்ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன.அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்தஎழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. .... வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. //
அபத்தத்தின் உச்சம்தான் இது. இங்கே அவர் சொன்ன மாற்றங்கள் யாவும் இயல்பாக மொழிக்கு ஏற்பட்ட மாற்றங்கள். மொழியின் தகவமைப்பு அது. மண்ணில் எழுதிய காலம், கல்லில் எழுதிய காலம், காகிதத்தில் எழுதிய காலம் என காலத்துக்கேற்ப வரிவடிவம் மாறியது. அதனையும், முற்றிலும் புதிய வரிவடிவத்தை தனதாக்கிக் கொள்வதையும் ஒப்பிட்டுப் பேசுவதை என்னவென்று சொல்ல... இன்று காகித உலகிலும் கணினி உலகிலும் ஆங்கிலத்துக்கு என்ன வசதிகள் உண்டோ அத்தனையும் தமிழுக்கும் உண்டு.

கடைசியாக,
காலப்போக்கில் தமிழ் வாசிப்பு அருகிவிடும் என்பதற்காக இந்தக் கருத்தை முன்வைக்கிறார் என்றால், சில கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
தமிழ் நாட்டின் மக்கள் தொகை என்ன, அதில் எத்தனை சதவிகிதம் பேர் தமிழில் எழுதப் படிக்கக் கற்றவர்கள் / கல்லாதவர்கள், தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை என்ன, அவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் தமிழ் கற்கமுடியாத சூழலில் இருக்கிறார்கள், அவ்வாறு கற்க முடியாத நிலைக்கு காரணம் என்ன, இதே நிலை தொடருமானால் இன்னும் எத்தனை காலத்துக்குப் பிறகு தமிழ் அருகிவிடும் ஆபத்து இருக்கிறது ....
இது போன்ற அறிவியல்ரீதியான கேள்விகளை எழுப்பி, அதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்து வந்திருந்தால், நிச்சயம் அது விவாதத்துக்கு உரியதுதான். ஆனால் இவர் வைத்திருப்பதோ, ஏதோ அரைத்தூக்கத்தில் இருக்கும்போது மனதுக்குள் எழுந்த கேள்வியை கருத்தாக முன்வைத்ததுபோல இருக்கிறதே அன்றி எந்த அடிப்படையும் இல்லாததாய் இருக்கிறது. வெறும் சர்ச்சையைக் கிளப்பும் நோக்கத்தில் அமைந்த கட்டுரை என்றுதான் இதைக்கூற முடியும்.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்பது தமிழுக்கு மட்டுமல்ல. எல்லாமொழிகளுக்கும் இது பிரச்சினைதான். அது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்தான். ஆனால் மொழியின் எழுத்துருவை மாற்றுவதால் அப்படியொரு மாற்றம்வந்து விடும் என்றால்....

கவிஞர் மகுடேசுவரன் பேஸ்புக்கில் எழுதிய பதிவின் கடைசிப் பத்திதான் நினைவுக்கு வருகிறது. இதோ...

//புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவரைப்பற்றி வாய்மொழிக் கதையுண்டு. எத்தனையோ நல்ல கருவிகளை உருவாக்கிய அவர்தம் இறுதிக்காலத்தில் ஓர் ஆராய்ச்சியைச் செய்தாராம். கொல்லைக்குச் சென்றுமலங்கழித்தபின் கழுவுவதற்குக் குளத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அதற்கு எளிதான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் இறங்கினாராம். மலங்கழிக்கும்போது முதலில் வரும் சிறுநீரை அடக்கி வைக்கவேண்டும். கழிப்பு முடிந்த பின்தான் சிறுநீரைக் கழிக்க வேண்டும். அவ்வாறு கழியும் சிறுநீரிலேயே கழுவிக்கொள்ள வேண்டும். இதுதான் அந்த விஞ்ஞானியின் தீர்வு.//