Sunday 24 March 2013

காலமும் நீரும் காத்திருப்பதில்லை


காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. நீங்கள், தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா, வேலை செய்கிறீர்களா, அரட்டை அடிக்கிறீர்களா, படிக்கிறீர்களா, படிப்பிக்கிறீர்களா, சமையல் செய்கிறீர்களா, சாப்பிடுகிறீர்களா, ஊடலில் இருக்கிறீர்களா, கூடலில் இருக்கிறீர்களா, பயணம் செய்கிறீர்களா, பயணத்துக்குக் காத்திருக்கிறீர்களா... இவற்றில் எதுவுமே காலத்திற்குப் பொருட்டேயில்லை.
திருப்பூருக்கு வருகிற தண்ணீரும் அப்படித்தான். யாருக்காகவும் காத்திருப்பதில்லை, நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா, வெளியில் இருக்கிறீர்களா, வெளியூரில் இருக்கிறீர்களா, உடல்நலமின்றி இருக்கிறீர்களா, அவசரத்தில் இருக்கிறீர்களா... எதுவும் அதற்குப் பொருட்டல்ல.
காலத்துக்கும் திருப்பூருக்கு வரும் தண்ணீருக்கும் ஒரே வித்தியாசம். காலம் நிற்காது ஓடிக் கொண்டே இருக்கும். தண்ணீர் அதன் இஷ்டத்துக்கு வரும். அதன் இஷ்டத்திற்கு நின்று விடும். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். நாளின் துவக்கத்தில் பரபரப்பாக இருக்கும் காலையில், மனது மந்தமாக இருக்கும் மதியத்தில், உறங்கத் தயாராகும் நள்ளிரவில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பின்னிரவில் என எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
இன்று தண்ணீர் வந்தது சரியாக இரவு 12 மணிக்கு. இரண்டு மணி நேரம் வரக்கூடும் என்பது எதிர்பார்ப்பு. அதற்குள் குடிக்க நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கிற அத்தனை பாத்திரங்களிலும் - தண்ணீர் நின்று போகிற வரை - நிரப்பி நிரப்பி அடுக்கி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நான் இருந்த காலனி முழுக்கவும் அரைத்தூக்கத்தில் தண்ணீர் பிடிப்பதில் முனைந்திருந்தது. சுற்றி இருந்த வீடுகளில் மூன்றில் யாரும் தண்ணீர் பிடிக்க வரவில்லை. அவர்கள் வீட்டு ஜன்னல்களில் வண்ண விளக்குகளுடன் நட்சத்திரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் கிறிஸ்துமஸை முன்னிட்டு இன்று நள்ளிரவு பிரார்த்தனைக்குச் சென்றிருக்க வேண்டும். அவர்கள் திரும்பி வரும்போது மணி எப்படியும் இரண்டாகி விடும். அதற்குள் தண்ணீர் நின்று விட்டிருக்கும்.
அவர்கள் திரும்பி வரும்போது தண்ணீர் வந்தது தெரிய வரும்போது அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்ற யோசனை எழுந்தது. இயேசுபிரானைத் திட்ட முடியாது. இன்று இரவு 12 மணிக்குத் தண்ணீர் திறந்து விடுவது நிச்சயம் இயேசுபிரான் செய்த வேலையில்லை. கொள்ளைலே போனவன், இன்னிக்குன்னு பாத்து திறந்து விட்டிருக்கான் என்று முகம் தெரியாத முனிசிபாலிடி ஊழியனை அவர்கள் திட்டக்கூடும்.
அதுவும் இன்று வந்தது நல்ல தண்ணீர். அடுத்து எட்டு நாட்களுக்குப் பிறகு வரப்போவது சப்பைத் தண்ணீர். இன்னும் எட்டு நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் நல்ல தண்ணீர் வரும். அதனால் திட்டுகள் வலுவாகவே இருக்கும். வாழ்த்துகளுக்கும் சாபங்களுக்கும் உண்மையிலேயே வலிமை இருக்குமானால் தண்ணீர் திறந்து விடும் ஊழியன் எப்போதோ போய்ச் சேர்ந்திருப்பான்.
* * *
வீடுகளுக்கு தனி இணைப்பு இல்லாதவர்கள், பொதுக்குழாயை நம்பி இருப்பவர்கள் தண்ணீர் வருவதற்குமுன் வரிசை வைப்பதற்கு கண்டுபிடிக்கும் வழிகளும் இங்கே புதுமையானவை. ஒருகாலத்தில் அவர்களே வரிசைகளில் காத்திருந்தார்கள். எப்போது வரும் என்கிற நிச்சயமின்மை அதிகரிக்க அதிகரிக்க, குடங்களை வைத்துவிட்டுப் போனார்கள். குடங்கள் காணாமல் போகும் வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, அங்கே பழைய அல்லது உடைந்த பக்கெட்டுகள் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்தன. அடுத்து வந்தது செங்கல் அல்லது ஏதேனும் ஒரு கல். குழாயை நோக்கி கற்களின் வரிசை காத்திருப்பதை திருப்பூரைத் தவிர வேறெங்கும் காண முடியாது.
* * *
திருப்பூரும் தண்ணீரும் எனக்கு ஒன்றும் புதிதல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கே இருந்தபோது தினமுமோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தெரிந்தவர்களிடம் சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு, கேரியரின் இரண்டு பக்கத்திலும் இரண்டு குடங்களை டயர் வளையத்தில் மாட்டிக்கொண்டு, ஒரு குடத்தை கேரியரில் வைத்துக் கொண்டு, நானும் என்போன்ற நண்பர்களுமாக பூண்டிக்குப் போவோம்.
இவ்வாறு சாகசப் பயணம் போவது அநேகமாக இரவு பத்து மணிக்குப் பிறகுதான். அங்கே எப்போதும் நல்ல தண்ணீர் படு வேகமாகக் கொட்டிக் கொண்டிருக்கும் இரண்டு குழாய்கள் சாலையோரத்தில் இருக்கும். எவ்வளவு பெரிய வரிசை இருந்தாலும் அதிகபட்சம் 15-20 நிமிடங்களுக்குள் தண்ணீரை நிரப்பிக் கொள்ள முடியும். வரும் வழியில் ஏதேனும் ஒரு டீக்கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டு, சிகரெட் புகைத்து மீண்டும் மிதிக்கத் துவங்குவோம்.
குடங்களில் இருக்கும் தண்ணீர் தளும்பித் தளும்பி வீணாகி விடாமல் இருக்க புதுப் புதுக் வழிகளை நாங்கள் கண்டுபிடித்தோம். பனியன்களை மடித்து பேக் செய்யப் பயன்படுகிற பாலிதீன் உறைகள்தான் இந்த விஷயத்தில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்பது என் கருத்து. மெல்லிய பாலிதீன் உறைகளைக் கிழித்து பந்தாகச் சுருட்டி, தண்ணீரில் நனைத்து, குடத்தின் கழுத்தில் வைத்து விடுவது. பாலிதீன் பந்து விரிந்து கொள்ளும், ஆனால் வெளியேயும் விழாது, தளும்புகிற தண்ணீர் வெளியேறவும் விடாது.
* * *
இந்தியாவில் இருக்கிற பிளாஸ்டிக் குடங்களின் எண்ணிக்கையில் பாதி திருப்பூரில்தான் இருக்கும் என்பது என் மதிப்பீடு. பிளாஸ்டிக் குடங்களை வாங்குவதற்கும் தனித்திறமை வேண்டும். விவரமில்லாதவர்கள் வாங்கிய குடங்களில் தண்ணீர் நிரப்பி டயர் சுருக்கை மாட்டியதும் கழுத்து களக்கென்று முறிந்துவிடக்கூடும்.
பொதுக்கிணற்றில் அல்லது குழாயில் பிடித்த நீருடன் தரமற்ற குடத்தில் விரல்களால் பிடித்துத் தூக்கிக்கொண்டு வரும்போது ஒவ்வொரு காலடிக்கும் விரல்கள் மில்லிமீட்டர் மில்லிமீட்டராக வழுக்கிக் கொண்டே வரும். வீடு சேர்வதற்குள் நான்கைந்து முறை கீழே இறக்கி கைமாற்ற வேண்டியிருக்கும். அப்படி இறக்கி எடுத்து வருவதை இளம் பெண்கள் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதில் இயன்ற அளவுக்கு கவனமாக இருப்போம். இருந்தாலும் பல சமயங்களில் இந்த முயற்சி தோல்வி அடையும்.

பெண்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எவ்வளவு பெரிய இடுப்புக்காரிகளாக இருந்தாலும் சரி, குடம் அவர்களின் இடுப்பில் கச்சிதமாக உட்கார்ந்து விடுகிறது. பாரமே இல்லாத குடத்தைத் தூக்குவது போல, லேசாக நனைந்த பாவாடை தாவணியுடன் ஒயிலாக வீட்டுக்கு நடப்பார்கள். உள்பகுதி கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கக்கூடிய குடங்கள் விரைவிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. எங்களுக்கு கொஞ்சம் மானம் தப்பியது.
* * *
நான் திருப்பூரில் வசித்த காலத்திலேயே இரண்டாம் குடிநீர்த் திட்டம் என்ற பேச்சுகள் பரவத் தொடங்கின. அது நிறைவேறியதும் வீட்டுக்கு வீடு தினமும் தண்ணீர் ஆறாகப் பாயும் என்பதான எதிர்பார்ப்பு நகரம் முழுக்கவும் இருந்தது. அதுவும் வந்தது. அப்புறம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் என்றானது. அப்புறம் மூன்றாம் குடிநீர்த் திட்டம் என்று கேள்விப்பட்டேன். இப்போது எத்தனாம் குடிநீர்த்திட்டம் நடப்பில் இருக்கிறது என்று தெரியவில்லை. எட்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் நிச்சயம் வருகிறது.
திருப்பூர்வாசிகளுக்கு இது வரமா சாபமா என்று சந்தேகம்கூட எனக்கு இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்காரனாக இருந்தாலும்கூட, தண்ணீர் வருகிற நாளில் அவன் வீட்டில் இல்லாதுபோனால், அடடா, தண்ணீர் இல்லாமல் அவன் என்ன செய்வான்... என்றுதான் ஒரு திருப்பூர்வாசி எண்ணுவான். பகையாளிகள் மனங்களில்கூட கனிவை ஏற்படுத்துகிற இந்த தண்ணீர்ப்பஞ்சம் ஒரு வரம்தான் இல்லையா?
மற்றொரு கோணத்தில் பார்த்தால், தண்ணீர் வருகிற நாள் மற்ற எல்லா பிரச்சினைகளையும் ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது. துக்க வீடோ, திருமண வீடோ, மாடியோ, குடிசையோ, செல்வனோ, ஏழையோ, எல்லா வீடுகளிலும் அன்று பேசப்படுகிற ஒரே பொருள் - தண்ணீர் எத்தனை மணிக்கு வரும் என்பதே. விலைவாசி, ஊதியப் பிரச்சினை, மின்வெட்டு, குடும்பச்சண்டைகள் எல்லாம் மறக்கப்பட்டு விடும். சில மணி நேரத்துக்கே என்றாலும் பெரும்பெரும் கவலைகளை எல்லாம் மறக்க இப்படியொரு வாய்ப்பு வேறு யாருக்கு இருக்கிறது!
எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டு. கத்தரிக்காயின் தலையில் கிரீடத்தையும் வைத்து அதற்கு மேல் ஆணியும் அடித்தது போல, தொழில்துறையில் அபாரமாக முன்னேறிய பெருமை என்னும் கிரீடங்களை சுமந்திருக்கும் திருப்பூருக்கு இயற்கை அடித்த ஆணிதானோ இந்த தண்ணீர் பிரச்சினை…?
விடையை யோசித்துக் கொண்டிருக்கும்போதே தொட்டியில் தண்ணீர் விழும் ஓசை மெலிதாகிறது.... தண்ணீர் சொட்டத் தொடங்கியது.... இதோ, ஓசை நின்று விட்டது. குழாயடியில் அங்கங்கே சிந்தி கொஞ்சமாகத் தேங்கியிருக்கும் நீர் நாளை காலை காகங்களுக்கும் குருவிகளுக்கும் தாகம் தீர்க்கலாம்.
இனி நாம் வழக்கமான கவலைகளுக்கு மீண்டும் திரும்பலாம்.

(ஒரு 'டிசம்பர் மாதப் பயணத்தின்போது எழுதி, கணினியில் ஏதோவொரு மூலையில் காண இயலாமல் மறைந்து கிடந்தது.) 

Monday 18 March 2013

பிரிய(யா) நிலா



ரயிலின் வேகத்துக்கிணையாய்
வெட்டவெளி வானில்
என் முகம் பார்த்தவாறே
ஓடி வருகிறது வெள்ளிநிலா
எனக்குத் தெரியும் அதுவும் 
பிரியத்தான் போகிறதென
பிரியத்தான் போகிறோமென
அதற்கும் தெரியுமாவென்றே
கவலையாய் இருக்கிறது.

* * *

நேற்றிரவு விடைபெறாத
ஏக்கத்தில் இளைத்த நிலா
ஆயிரம் காதங்களுக்கும் அப்பால்
இன்றும் தொடர்கிறது
சன்னலினூடாக என்
முகம் பார்த்தவாறு
அடுத்த சந்திப்புக்கு
ஆறுமாதமோ ஆண்டுகளோ
ஆகக்கூடுமென்பது 
அதற்குப் புரிந்திருக்குமோவென்றே 
கவலையாக இருக்கிறது.

* * *

நீ வானத்திலும்
நான் பூமியிலும்
உனக்கும் எனக்கும்
எட்டாத்தொலைவு
எல்லாம் அறிந்திருந்தும்
விடியலுக்கு முந்தைய
கடைசி தரிசனத்திற்காக
பனியின் ஊடாக
குளிரில் நடுங்கியவாறே
என் பாதை அறிந்து
பின்தொடர்கிறாய்
காலைக் குளிரிலும்
கதவைத் திறப்பேனென
காத்திருக்கும் நீ
கண்டறிந்தது எப்படி ...


Saturday 9 March 2013

தில்லிகையின் கவிதை நிகழ்வு



9-3-2013 தில்லிகை நிகழ்ச்சி மனநிறைவையும் கொந்தளிப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. முழு நிகழ்வின் காணொளி தில்லிகை பக்கத்தில் வெளியிடப்படும் என்றாலும் இன்றே எழுதுதவன் காரணம் அந்தக் கொந்தளிப்புதான். 

இன்றைய நிகழ்ச்சியிலும் மூன்று தலைப்புகளில் மூவர். மூன்றுக்கும் இடையே இழையோடியது ஒடுக்கப்படும் மக்கள் என்கிற கருத்து.
முதலாமவர் அம்பேத்கர் - தலித் கவிதை பற்றி
இரண்டாமவர் எச். பாலசுப்பிரமணியன் - இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற கவிதை நூல் பற்றி.
மூன்றாமவர் சதீஷ் - இலங்கைக் கவிஞர் அகிலனின் கவிதைகள் பற்றி.

முதலாமவர், சொந்த நாட்டில், ஜனநாயகரீதியாக சம உரிமைகள் உறுதிசெய்யப்பட்ட நாட்டில் ஒடுக்கப்படும் தலித் மக்களின் கவிதைகள் எவ்வாறு உருவாயின, அடையாளம் எப்போது உருவானது, வீச்சு எப்போது துவங்கியது, இன்றைய நிலை என்ன என்பதான பரவலான பார்வையை சுருக்கமான முன்வைத்தார். குறிப்பாக 2010க்குப் பின் தலித் கவிதைகளில் செயல்பாட்டுக்கான அறைகூவல் இருப்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.

இரண்டாமவர், டென்மார்க்கில் புலம்பெய்ர்ந்து வாழும் இலங்கைத் தமிழர் கலாநிதி ஜீவகுமாரன் டேனிஷ் மொழியில் எழுதி, ஜீவகுமாரன் தமிழில் மொழிபெயர்த்து, பாலசுப்பிரமணியன் இந்தியில் மொழிபெயர்த்த இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற கவிதை நூலை அறிமுகம் செய்தார். அது கவிதை நூலாகவும், புதினமாகவும், காப்பியமாகவும் அமைகிறது என்று கூறிய அவர், நூலிலிருந்து பல எடுத்துக்காட்டுகளையும் காட்டினார். இது, சொந்த நாட்டைத் துறக்க நேர்ந்து, வேற்று நாட்டின் அரவணைப்பில் வாழ நேர்ந்து, அந்நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேலையில் வேர்களை மறக்கவும் முடியாமல் தவிக்கும் ஒரு தாய் தன் மகனுக்கு எழுதியதாக எழுதிய கடிதங்களின் தொகுப்பு.

மூன்றாமவர் பொங்கிய எரிமலையாய் நேற்றும் அடங்கிய எரிமலையாய் இன்றும் இருக்கிற இலங்கையில் வாழும் கவிஞர் அகிலனின் கவிதைகளை மேற்கோள்களுடன் காட்டினார். இது, சொந்த நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட இனத்தின் குரலின் பதிவு.


மூன்றையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்குள் தனியாக ஓர் உளைவு ஓடிக்கொண்டிருந்தே இருந்தது. அதற்குக் காரணங்கள் பல.

  • சுமார் ஆறுமாதங்களுக்கு முன் எச். பாலசுப்பிரமணியன் ஐரோப்பியப் பயணம் முடித்துத் திரும்பியதும், லண்டனில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் இணைப்பை அளித்திருந்தார். நேர்கண்டவர் இளைய அப்துல்லாஹ். அவரது பெயரைப் பார்த்ததும்தான் கடந்த புத்தகத் திருவிழாவின்போது வாங்கிய லண்டன் உங்களை வரவேற்பதில்லை என்ற நூலைப் படித்து முடித்தேன்.
  • தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலையில் இலங்கை எழுத்தாளர்கள் மூவர் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா. இந்த வெளியீட்டு விழாவையும் அப்துல்லாவின் நூலையும் இணைத்து பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. பதிவேற்ற மறந்து போனது.
  • கிட்டத்தட்ட அதையொட்டி இலங்கை மீதான ஐநா தீர்மானம் பற்றிய விவாதம், இந்திய அரசு தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது குறித்த என் பதிவுகள்.

  • அதைத் தொடர்ந்து காலச்சுவடு வெளியீடாக வந்த கூண்டு (The Cage) என்னும் தமிழாக்க நூலைப் படித்து முடித்தது. அதற்கும் பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் பாதியிலேயே நிற்கிறது. (நண்பர் குருமூர்த்தி படிக்கக் கேட்டார் என்பதற்காக அவருக்குத் தர தில்லிகை கூட்டத்திற்கு எடுத்துச்சென்ற ஐந்து நிமிடப் பயணத்தின்போதுகூட முன்னுரையை மீண்டும் ஒருமுறை படித்தது.)
  • அதைத் தொடர்ந்து, இலங்கையின் சிங்கள, தமிழ், ஆங்கிலக் கவிஞர்களின் தொகுப்பு நூலை நான் வடிவமைக்கும்போது அவற்றைப் படித்தது (அந்த நூல் ஆங்கிலத்தில் விரைவில் வெளியாக உள்ளது, அதிலும் அகிலனின் கவிதைகள் உண்டு.)
  • அண்மைத் தமிழகப்பயணத்தில் ரயிலில் சந்தித்த, இலங்கையைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் பயணிகள், அவர்களுடன் நிகழ்ந்த இரண்டு நாள் உரையாடல்கள்.
  • திரும்பி வந்ததும் காண்போர் அனைவரையும் கண்கலங்க வைக்கும் வகையில் வெளியான, பிரபாகரன் மகன் படுகொலைப் புகைப்படம்...
  • அடுத்து, வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற விவாதம்.... ஐநா தீர்மானம் குறித்து அமைச்சரின் நழுவல்  பதில்கள்...

இவையெல்லாம் சந்தர்ப்பவசமான தொடர் நிகழ்வுகள் என்றாலும் தொடர்ந்து உள்ளுக்குள் உளைந்து கொண்டிருந்தவை என்பதால் தில்லிகை நிகழ்வில் இலங்கைத் தமிழர் கவிதைகளைக் கேட்டதும் அத்தனையும் ஒருசேர உரைகளோடு சேர்ந்து மனதுக்குள் முன்னிலை பெற்றன.

அதனால்தான் இந்தப் பதிவு. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழர்கள் உணர்வுபூர்வமாகவே அணுகி வந்திருக்கிறார்கள். 80கள் முதலாகவே பல்வேறு குழுக்களின் போராட்டங்களை, குழுக்களுக்கு இடையிலான மோதல்களை, தமிழக அரசியலை, இந்திய அரசியலை, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பல்லாண்டுகளாக இந்திய அரசு பின்பற்றி வரும் அணுகுமுறைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் என் திடமான கருத்து இது.

இலங்கைப் படைப்புகளும் கவிதைகளும் இந்திய மக்களை எட்டவில்லை. தமிழகத் தமிழர்கள் பார்த்ததெல்லாம் ஊடகங்கள் முன்வைக்கும் தனிநபர் துதிகளும் சித்திரிப்புகள் மட்டுமே. கூடவே தமிழக அரசியல்வாதிகள் தம்வசதிக்கேற்ப குழுக்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற போக்குகளும் இதற்குத் துணையாயின. இலங்கையின் சோகத்துக்கு இதுவும் ஓர் முக்கியக் காரணம்.

நான் எந்தப் போராளி அமைப்பின் ஆதரவாளனோ, அனுதாபியோ அல்ல. போராளி அமைப்புகளுக்கு அவற்றுக்கே உரிய நியாயங்கள் இருந்திருக்கும் என்பதும் புரிகிறது. அதற்காக எந்த அமைப்பையும் ஒரேயடியாக துரோகி என்றோ, தமிழர்களின் காவலன் என்றோ கருதியவன் அல்ல. அதைப்பற்றியெல்லாம் இப்போது பேசிப் பயனில்லை.

படித்தவர்கள் மத்தியில்கூட இலங்கைப் பிரச்சினை பற்றிய புரிதல் மிகக் குறைவுதான். பிரச்சினையின் துவக்கம் பலருக்கும் தெரியாது. பெரும்பாலோர் பார்ப்பதெல்லாம் 80களுக்குப் பிந்தைய காலத்தை மட்டுமே. இலங்கை இனப்பிரச்சினையின் வரலாறு இந்தியர்களுக்குத் தெரியாதிருப்பதில் வியப்பில்லை. ஆனால் தமிழர்களுக்கே தெரியாது என்பதே முக்கியம். தெரிந்திருந்தால் ஒருகாலத்தில் தமிழக அரசியல்வாதிகள் மைய அரசை நிர்பந்திக்கத் தலையிட்டதுபோல இப்போதும் தலையிட்டிருக்க முடியும்.

இந்தக் கருத்துகளை நான் பகிர்ந்துகொண்டபின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதீஷ் ஒரு கருத்தை வெளியிட்டார். தான் முன்வைத்த உரையின் நோக்கம் அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அல்ல என்று.

அவருடைய சுயமரியாதையை, நோக்கத்தை மதிக்கிறேன். நான் கூறுவதும் அனுதாபம் குறித்தல்ல. உண்மை வரலாறு மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே. பலநாடுகளின் வரலாறுகள் இலக்கியவழி மக்களை எட்டியுள்ளது. இலக்கியவழியாகவே பல நாடுகளின் அரசியலையும் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இலங்கை விஷயத்தில் மட்டும் ஊடகங்கள் கட்டமைக்கிற, உணர்ச்சியின்பாற்பட்ட அணுகுமுறையை மட்டுமே தமிழர்களாகிய நாம் கொண்டிருந்திருக்கிறோம்.

காலம் மிகவும் கடந்துபோய் விட்டது என்பது புரிகிறது. இருந்தாலும் ஓர் ஆசை. தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் போலின்றி இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் பலவும் இணையத்தில் பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கின்றன. படித்தவர்கள் பகிரவும் படிக்காதவர்கள் படிக்கவும் வேண்டும்.

அடுத்து வருகிற தலைமுறையேனும் பிரச்சினையைப் புரிந்து கொள்ளட்டும்.

முதல் கட்டமாக, இலங்கைப் படைப்புகள் பலதையும் கொண்டுள்ள வலைதளம் இது.
பகிர விரும்புவோருக்கு - http://www.noolaham.org

Friday 8 March 2013

படித்ததில் பிடித்தது - 4


காற்றில் மிதக்கும் நீலம் 




புத்தகத் திருவிழாவின்போது தில்லி வந்திருந்த சக்தி ஜோதி நான்கு நூல்களைப் பரிசளித்தார். இப்போதெல்லாம் வாசிப்புக்கு பயணங்கள்தான் வாய்ப்பாக அமைகின்றன. வானொலிக்குச் செல்லும் வழியில் படிப்பதற்காக சட்டெனக் கையில் கையில் கிடைத்த ஒன்றை எடுத்துச்சென்றேன். சுகுமாரனின் முன்னுரையைப் படிக்கும்போதுதான் இது அவரது நான்காவது நூல் என்று தெரிந்தது. அடடா... முன்னரே பார்த்து எடுத்திருந்தால் அவருடைய கவிதையின் வளர்ச்சியை அவதானித்திருக்கலாமே என்ற எண்ணம் ஒருபக்கம். படித்தபின் நல்ல கவிதை நூல் படிக்கத் தேர்வு செய்தேன் என்ற திருப்தி மறுபக்கம். 

இது விமர்சனம் அல்ல. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே. சக்திஜோதி அவருடைய ஐந்து கவிதை நூல்களையும் பஞ்சபூதங்களை தலைப்பாகக் கொண்டு படைத்திருப்பதாகச் சொன்னார். இது காற்று குறித்தானது. காற்று மட்டுமில்லை, நிலமும் நீரும் வானும் தீயும்கூட இங்கே இருக்கத்தான் செய்கின்றன.

எந்தவொரு கவிதைத் தொகுப்பிலும் எல்லாக் கவிதைகளுமே மனதிற்குப் பிடித்து விடுவதில்லை. சில கவிதை நூல்களில் மிகச்சில கவிதைகளே திருப்தி தரும். சிலவற்றில் பலவும் திருப்தி தரும். இது இரண்டாவது வகை.

காட்டுத்தீ, நிலா முற்றம், அறியப்படாத சுவை, பாதையில் பரப்பிய தென்றல், மேகம் உரைக்கும் செய்தி, கடிதம், நினைவெனும் பெருவெளி, மாதச்சம்பளம், அன்பில் நனைந்த மழை, நினைவின் சுவை, சில நாட்கள், மாதவம், பருவம், விரிசுடர், மூடிய அறை, காற்றில் திசையறிந்தவன், மகள், வாகை என்றொரு இனம், நதிக்கரையில் நிற்கும் புதிர், பூக்கனவு, கோடை மழை, சுமை, மேகங்கள் உரசிக்கொள்ளும்பொழுது, உற்சாகம், குறிஞ்சி மலர், ஓவியம், காதலின் நீட்சி, முகவரி, கொண்டாட்டம்... என, நூலில் உள்ள கவிதைகளில் பாதிக்கும்மேல் திரும்பவும் வாசித்துப் பார்க்க வைத்தது திருப்தி அளித்தது. 

காட்டுத்தீ
... காடுகளுக்குப் பாதை இல்லை
நெருப்புக்கும்கூட ...
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இரவுகளில் தீயின் தடங்களைப் பார்த்து புரியாத புதிரென வியந்தவர்களுக்கு இந்தக் கவிதை இன்னும் அழகாகப் புரியும்.


பாதையில் பரப்பிய தென்றல்
... இந்தச் சுடர் அணையும் முன்
வந்து விடுவாய்
உன் பாதங்கள் நோகாதபடிக்கு
நிலத்தின்மேல் தென்றலைப் பரப்பி வைத்து
இமைகள் மூடாது காத்திருக்கிறேன் ...
காதலைப் பொதுமைப்படுத்தும் இந்தக் கவிதையின் மென்மை நெகிழ வைக்கிறது.

கடிதம்
... எழுத வேண்டிய ஒரு கடிதத்தை
எவ்வாறு தொடங்க வேண்டுமென்பதை
அறியாமல் இருக்கிறேன்
அறிந்துகொள்ள விரும்பாமலும் இருக்கிறேன் ....

நினைவென்னும் பெருவெளி
... கொடியது இப்பனி அல்ல
பனிக்காலத்தில் வரும்
உன் நினைவுகள் ...
காதலை எத்தனை முறை எத்தனை கவிஞர்கள் எத்தனை விதமாகப் பாடினாலும் இன்னும் எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. 

மாதச் சம்பளம், சில நாட்கள்  இந்த இரண்டும் பெண்களுக்கே உரிய பிரச்சினையை மென்மையாய் முன்வைக்கின்றன.
... மூன்று நாட்களை அகற்ற விரும்பியபடி
அந்த நாளுக்காய் காத்திருக்கத் துவங்குகிறேன்.

... ஆணாய் பிறந்திருக்கலாம் என்று
நினைக்கத் தோன்றும் அந்த சில நாட்கள்.

அடுத்து மாதவம் கவிதை பெண்ணாய் பிறப்பதற்கு பெருந்தவம் செய்திருக்க வேண்டும் என்கிறது. காரணம் -
...  பெண்ணுடல் புதிர்களால் ஆனது ...
வானத்திலும் மிதக்கும் நீரிலும் மிதக்கும்
இரகசியங்கள் கொண்டது ...
நாற்பத்தொன்பது ஜென்மங்களும்
பெண்ணாகவே பிறக்க வேண்டும்.

நினைவின் சுவை அட... என்று நினைக்க வைக்கிறது சங்கப்பாடலை நினைவூட்டுவதால்.
... இரவெல்லாம் மூங்கிலைத் தாலாட்டும்
தென்றலின் பாதையை துளையிடும் வண்டுகள்
மழையில் நனைந்த தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை
அவனிடம் நினைவூட்டினால்தான் என்ன

சந்திப்பு கவிதை மிகச்சிறப்பாய் அமைகிறது. ஆதவன் தன் சிறுகதைகளில் விளக்கும் அகமன உணர்வுகளை இந்தச் சிறிய கவிதை எளிதாய் கூறிச்செல்கிறது.
சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்தோம்
சந்திப்பால் ஒரு பயனும் இல்லையென்றபோதும்
நமக்குத் தெரியும்
ஒரு பயனும் தேவையில்லையென
என்றபோதும்
உனக்கு ஒரு பயன் வேண்டுமென நினைத்தேன்
எனக்கு ஒரு பயன் வேண்டுமென நினைத்தாய் ...
சந்தித்தோம்
பயன் இருந்தது மாதிரியும் இருந்தது
இல்லாதது மாதிரியும் இருந்தது
காத்துக்கொண்டிருக்கிறோம்
இன்னும் ஒரு சந்திப்பிற்கு
ஒருவேளை அந்தச் சந்திப்பிலாவது
யாருக்காவது பயன் இருக்கலாம்.

மகள் கவிதையை ஒரு தாய் தன் மகளின் மாற்றங்களைப் பார்ப்பதாகவும் கருதலாம், ஒரு கவிஞர் தன்னைத்தானே பார்ப்பதாகவும் கருதலாம்.
... அவள் அவளாக மாறியபொழுது
அவளை அவள் உணர்ந்து
அவலைக் கடக்க நாம் அனுமதிக்கவேயில்லை.

காவியா, நதிக்கரையில் நிற்கும் புதிர், சுமை, முகவரி, இன்னும் சில கவிதைகளை ஏற்கெனவே முகநூலில் பலர் பகிர்ந்து விட்டதால் இங்கே எடுத்தாளவில்லை.

இன்னும் பலவற்றைக் குறித்து வைத்திருந்தாலும், நீளம் கருதி தவிர்த்துவிட்டு, உற்சாகம் என்னும் கவிதையை முத்தாய்ப்பாகத் தரலாம் என்று தோன்றுகிறது.
... ஒரு சொல் போதும் ஒருவன் சாவதற்கு
ஒரு சொல் போதும் ஒருவன் வாழ்வதற்கு ...
இதில் சொல்பவர் யார் என்பதுதான்
சொல்லின் முக்கியம். ...
ஒரு சொல் என்பது
ஒருவனை வாழ வைக்குமானால்
அந்தச் சொல்லைச் சொல்வேன்.

அதுதானே கவிதையின், இந்தக் கவிதை எழுதியவரின் நோக்கம். ஒற்றைச் சொல் போதுமாயிருக்கும்போது இன்னும் சொற்களை நான் எழுதத்தான் வேண்டுமா...?

காற்றில் மிதக்கும் நீலம்
சக்தி ஜோதி
உயிர் எழுத்து பதிப்பகம்முதல் தளம்தீபம் வணிக வளாகம்கருமண்டபம்திருச்சி-2
பக்கம் 13, விலை ரூபாய் 75


வாசிப்பை நேசிப்போம்

Thursday 7 March 2013

அலைமோதும் கரையோரம் அவளோடு...

  


வங்கக் கரையோரம் வானுயரும் அலையோரம்
தென்வடலாய் நீண்டிருக்கும் மணற்பரப்பின் மீதிருந்து
காத்திருந்தேன் அவள் வரவைப் பார்த்திருந்தேன்
நெஞ்சு நிமிர்ந்திருக்க நேர்ப்பார்வை கொண்டவளாய்
வஞ்சியவள் வந்து நின்றாள் விண்ணுதிர்த்த தேவதையாய்.

`கண்ணா நான் தாமதமோ ! காத்திருந்த கடுகடுப்போ !'
என்றவளின் மொழிகேட்டுப் பூத்துச்சிரித்து விட்டேன்
`காத்திருத்தல் எனக்கொன்றும் புதிதில்லை ! அதிலும் உன் 
வரவுக்குக் காத்திருத்தல் பெரிதில்லை ! வாழ்நாளை
காத்திருந்தே கழியுமென்று சொன்னால் அதையும் நான்
கட்டளையாய் ஏற்றிடுவேன் ! காதலுடன் காத்திருப்பேன் !'
என்றுரைக்க அதுகேட்டு மங்கை மகிழ்ந்து நின்றாள்.

`என்னம்மா! ஏதேனும் சத்தியமா! இங்கு வந்த
பின்னாலும் ஏனின்னும் நிற்கின்றாய்! முகம்காட்டி
அமர்ந்திடுவாய்' என்றென் சொல்லுக்குக் கட்டுண்டாள்.
மௌனத்தில் கரைந்ததங்கே மணித்துளிகள்.

ஏனின்று தேன்மொழியாள் மௌனம் தேர்ந்தெடுத்தாள்
காரணம் புரியாமல் கலங்கியவன் நான் கேட்டேன்
`ஏனிந்த மௌனமடா? ஏதேனும் பிரச்சினையா?'
விழியுயர்த்திப் பார்த்த அவள் விளக்கலானாள்

`முகில் பொழியும் மழையும் காற்றும் நிலவும்
திகுதிகு வென் றெரிகின்ற கதிரோன் ஒளியும்
பூமி மனிதருக்குப் பொதுவென் றானதுபோல்
என் வாழ்வில் வருகின்ற இன்பங்கள் துன்பங்கள்
நம் இருவருக்கும் பொதுவென்றே ஆனபின்னே
எனக்கென்று தனியாக ஏதும் இருந்ததுண்டா?'
என்றந்த ஆரணங்கு காதலைப் பொழிந்துவிட்டாள்.

`பொதுவென்று புரிந்தவளே! உனக்குள் புதைந்திருக்கும்
பொதியை இறக்கிவிடு' என்றுரைக்க அவள் சொன்னாள் -
`காலை கடற்கரையின் சாலையில் வரும்போது
மாலை மலர்களுடன் ஒரு கூட்டம் நின்றிருந்து
மாகவியின் சிலையடியில் பேச்சில் கழித்திருந்த
காட்சியினைக் கண்டபின்னே ஆயிரமாய் கேள்விகளே
அலைமோதும் இதயமிது. அதனாலே பேசவில்லை'
என்றவளும் எடுத்துரைக்க வியப்புற்று நான் கேட்டேன்.

`பெண்ணே! இதற்காகப் பெரிதும் கலங்குவதேன்?
மாகவிக்கு மாலையிடல் புதிதன்று. தேவை...' என்று
வார்த்தை முடிக்கு முன்னே மங்கை சினந்தெழுந்தாள்.

`பாரதிக்குச் சிலையெடுத்து மாலையணி வித்துத் 
தமிழ்ச் சாரதியின் நினைவாகச் சாலைக்குப் பேர்வைத்துக்
கூட்டம்கூடி நின்று கும்பிட்டுப் புகழ்ந்துரைத்துக்
கூட்டுக்குள் நுழைந்தவுடன் மறந்திடுதல் முறைதானோ!

வீட்டு வேலைகளும் செய்யவேணும் - பெண்
நோட்டுகளும் கொண்டு வரவேணும்!
பெற்றிடும் மக்களைப் பேண வேணும் - அவள்
முற்றிலும் முட்டாளாய் வாழவேணும் !
இப்படியே நினைத் திருக்கின்ற கூட்டம்
இன்னமும் இங்குதான் இருக்குது !

விட்டுக் கொடுக்கவே வேணுமென்பார் - அவர்
மட்டுமதை யென்றும் செய்ய மாட்டார் !
பட்டங்களே பெற்று விட்டாலென்ன - அவள்
பாங்கிலே வேலையும் செய்தாலென்ன
கட்டவேணுமொரு மஞ்சள் கயிறென்றால் - இங்கு
கட்டுக்கட்டாய் நோட்டுத் தர வேணும் !

பட்டும் நகைகளும் பெட்டியும்தான் மட்டும்
எட்டும் மங்கையர் சிந்தனைக்கு என்று
வெட்டியாய் பேசுவார் வீட்டுக்குள்ளே - அவர்
கொட்டி முழங்குவார் கூட்டத்திலே !

அச்சமும் நாணமும் பெண்களுக்கே நல்ல
கற்பும் நெறிகளும் மங்கையர்க்கே என
எச்சமாகிப்போன இச்சரக்கை அவர்
உச்சத்தில் தூக்கிப் பிடித்திருப்பார்.

கண்ணுக்கழகாய் பெண்பட்டு விட்டால் - அவள்
கண்ணியிலே விழப் பார்த்திருப்பார்
கண்ணியினை அவள் கண்டு கொண்டால் - அவர்
களங்கம் பலதும் சுமத்துவார்!

ஆபீஸில் வேலைதான் செய்தா லென்ன - அட
ஆலையில் வேலைதான் செய்தா லென்ன
ஆடவர் ஏவிடும் கணைகளுக்கு - அவள்
அஞ்சியஞ்சி நாளும் வாழுகிறாள்!

என்கவி பாடிய காலமென்ன - அட
எழுபதாண்டுகள் போயுமென்ன
மாதருக்கிழிவுகள் போகலையே - அட
மடமைகளின் னமும் மாயலையே !

என்றவளின் மொழிகேட்டு வெட்கித் தலை குனிந்தேன்

என் செய்வேன் என்னினமே இன்னும் உன் உள்ளத்தில் 
பெண்மையைப் பூஜிக்கும் நல்லொளியும் தோன்றலையே !
மென்மொழி மங்கையரை மிதித்தே வைத்திருக்கும்
வன்மைக் குணங்களெலாம் வாழக்கொழிந்து போகலையே !

மாகவிக்கு சிலைவடித்தல் மாலையிடல் போதாது !
மேடைகளில் மட்டுமவன் புகழ்பாடல் ஆகாது !
பேதம்போய் பெண்ணினத்தை சரிநிகராய் கருதாமல்
வேதம்போல அவன் கவிதை போற்றல் பயனில்லை !

காதலை மட்டுமா கவிராசன் பாடிவைத்தான் !
மாதரசி வாழ்கவென மகிழ்வோடு கூத்திட்டான் !
ஓதிச் சென்றவனின் உரைதனைச் சிந்திப்பீர் !
நீதியறிந்திடுவீர் பெண் நிகரெனப் புரிந்திடுவீர் !