Wednesday 16 April 2014

கருத்துக் கணிப்புகளா? கருத்துத் திணிப்புகளா?

என்டிடிவி தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி - என்டிஏ - முன்னிலை வகிப்பதாகவும் கடந்த மாதம் செய்தி வந்தது. கருத்துக் கணிப்பின் முடிவுகள் கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.


அப்போது பேஸ்புக்கில் மார்ச் 16ஆம் தேதி நான் எழுதியது இது -
ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா....
இதோ... முதல் கணிப்பு வந்தாச்சு.
இப்பத்திக்கு பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு சொல்லியாச்சு.
அப்படீன்னா... அம்புட்டுதானா...
ஊஹூம். அவசரப்படாதீங்க. இனி அடுத்த கணிப்பு வரும். அதுல இன்னும் கொஞ்சம் கூட்டிக் காட்டணும். அப்புறம் மூணாவது கணிப்பு வரும், அதுல கிட்டத்தட்ட மெஜாரிட்டிக்கு நெருங்கிட்டதா காட்டணும்.
இதுதான் கார்ப்பரேட் மீடியாவின் டெக்னிக்.
பி.கு. தேர்தல் கருத்துக் கணிப்புகள் இந்தியாவில் ஒருபோதும் சரியாக இருந்ததில்லை என்பதைக் காட்டும் பதிவு விரைவில் எழுதுவேன் என்று நம்புகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிற அதே நேரத்தில்..........

காங்கிரஸ் பின்னடைவு காணும், என்டிஏ முன்னிலை வகிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இப்படித்தான் படிப்படியாக கருத்தைக் கட்டமைக்க ஊடகங்கள் முயலும் என்று நான் எழுதியதும் சரியாகத்தான் போயிற்று. இப்போது என்டிடிவி அடுத்த கட்டக் கணிப்பை வெளியிட்டது. மேலே நான் குறிப்பிட்டதுபோலவே பாஜக கூட்டணி மெஜாரிட்டியை எட்டிவிடும் என்று கூறியுள்ளது.  


இந்தியப் பொதுத் தேர்தல்களில் கருத்துக் கணிப்புகள் ஒருபோதும் உண்மை முடிவுகளை எட்டியதே இல்லை என்பதே உண்மை. ஆனால் தேர்தலுக்குத் தேர்தல் கருத்து கணிப்புகளுக்கும் பஞ்சமில்லை, அதுகுறித்த விவாதங்களுக்கும் பஞ்சமில்லை.

எனவே, மேலே குறிப்பிட்டபடி, தேர்தல் கருத்துக் கணிப்புகள் எவ்வாறு பொய்யாகிப் போயின என்பதை அட்டவணைப்படுத்தி இன்னொரு பதிவு எழுதினேன். அட்டவணையும் பதிவும் கீழே
கருத்துக் கணிப்பு புருடாக்கள்

ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக்கணிப்புகள் என்று எல்லா தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் பீற்றிக் கொள்ளும். வேலை கெட்ட நாமும் அவற்றைப் பிடித்துக்கொண்டு இவந்தான் ஜெயிப்பான் அவந்தான் ஜெயிப்பான் என்று மோதிக்கொண்டிருப்போம். கட்சி ரசிகர்கள் தவிர, பிரணாய் ராய் ரசிகர்கள், ராஜ்தீப் ரசிகர்கள் என்றும் மோதிக் கொண்டிருப்போம். இதற்கிடையில் ஊடகங்கள் நன்றாகக் கல்லா கட்டும்.

இதுகுறித்து விவரமாக எழுத நிறையவே தரவுகள் சேர்த்திருக்கிறேன். ஆனால் எழுத நேரம் இருக்குமா என்று தெரியாது. அதனால், சுருக்கமாக கடந்த தேர்தலின் கருத்துக் கணிப்புகள் குறித்த அட்டவணை தந்திருக்கிறேன்.

கணிப்பின்போது கேள்வி கேட்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் என்று பார்த்தாலே போதும், இது எப்பேர்ப்பட்ட புரட்டு என்று தெரியும். 534 தொகுதிகள் கொண்ட இந்தியாவில், 81.4 கோடி வாக்களார்கள் கொண்ட நாட்டில், கருத்து கேட்கப்பட்டது குறைந்தது 16569 முதல் அதிகபட்சம் 54000 பேரிடம்தான். இதை வைத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மக்களின் மனநிலையைக் கேட்டு விட்டதாப் பீற்றிக் கொள்வதுதான் கருத்துக் கணிப்புகள்.

இப்போதும் துவங்கி விட்டன. வாங்கிய காசுக்கு குலைக்கவும் வாலை ஆட்டவும் வேண்டாமா...

இதோ... கடந்த தேர்தலின் எல்லா கணிப்பு முடிவுகள். உங்கள் வசதிக்காக.

  
சரி, தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள்தான் இப்படி என்றால், தேர்தல் நாள் கருத்துக் கணிப்புகள் எக்சிட் போல் கிட்டத்தட்ட சரியாக இருக்க வேண்டும் அல்லவா... வாக்களித்து விட்டு வெளியே வரும் மக்களிடம் எடுக்கப்படுகிற கணிப்புகள்கூட சரியாக இல்லாமல் போகுமா... இது குறித்து அடுத்த பதிவு எழுதினேன்.

கருத்துத் திணிப்புகள்
கடந்த தேர்தலின் கருத்துக் கணிப்புகளும் எவ்வாறு பொய்யாகிப் போயின என்பதை முந்தைய பதிவில் பார்த்திருப்பீர்கள். அதில் கருத்துத் தெரிவித்த சிலர், எக்சிட் போல் எனப்படும் வாக்களிப்புநாள் கணிப்புகள் பெருமளவுக்கு சரியாக இருக்கும் என்றார்கள்.

சரி, கடந்த தேர்தலில் நடத்திய எக்சிட் போல் கணிப்புகள் எப்படி இருந்தன. அவையேனும் உண்மையான முடிவுகளை கொஞ்சமாவது நெருங்கி வந்ததா... இதோ அட்டவணை -



(ஊடகங்கள், கட்சிகள் நடத்திய கணிப்புகள் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளன. சூதாட்டக்காரர்களும் நடத்தியிருக்கிறார்கள், அவற்றை அட்டவணையில் சேர்க்கவில்லை. இப்போது நடக்கும் தேர்தலிலும் சூதாட்டக்காரர்கள் கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.)
  • பாஜக தலைமையில் என்டிஏ கூட்டணிக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது குறைந்தபட்சம் 165, அதிகபட்சம் 220. உண்மையில் கிடைத்தது 157.
  • காங்கிரஸ் தலைமையில் யுபிஏவுக்கு எதிர்பார்க்கப்பட்டது, குறைந்தபட்சம் 170, அதிகபட்சம் 218. உண்மையில் கிடைத்தது 262.
  • காரணங்கள் என்னவாக இருந்திருக்கும்...
  • கணக்கெடுத்த நபர்களின் எண்ணிக்கை குறைவு
  • அரசியல் கட்சிகளின் ஆர்வலர்கள் வேண்டுமென்றே அதிக நபர்களை அனுப்பிவைத்து கணிப்பில் வாக்களிக்க வைப்பது
  • அரசியல் கட்சிகள் தமக்கு ஏற்றவாறு திரிப்பது
  • அரசியல் கட்சிகள் கூறியவாறு கணக்கெடுப்பு நிறுவனங்கள் திரிப்பது
  • வாக்களித்தவர்கள் வேண்டுமென்றே பொய்யான தகவல் தருவது

ஆக, கருத்துக் கணிப்புகள் என்னும் பெயரில் கருத்துத் திணிப்புகள்தான் பெரும்பாலும் நடைபெற்று வந்திருக்கின்றன. 


கருத்துக் கணிப்பை வைச்சு விவாதம் செய்யறவங்களைப் பாத்தா சிப்புச் சிப்பா வருது.... :)

கடந்த தேர்தலின் இத்தனை விவரங்களையும் பார்த்த பிறகும் கருத்துக் கணிப்புகள் சரியாகத்தான் இருக்கும் என்று வாதிட்டவர்களுக்கும் குறைவில்லை, இப்போதும் நம்புகிறவர்களுக்கும் குறைவில்லை.

கடந்த தேர்தலில் மட்டுமல்ல, 2004 தேர்தலிலும் கணிப்புகள் பொய்யாகிப் போயின என்கிற உண்மை அரசியல் நோக்கர்களுக்குத் தெரியும். உண்மையில் இவை கருத்துக் கணிப்புகள் அல்ல, கருத்துத் திணிப்புகள். விலைபோன ஊடகங்களின் இந்தத் தந்திரங்களைப் புரிந்து கொள்வதைப் பொறுத்தே இருக்கிறது மக்களாட்சியின் வலிமை.