Thursday 26 October 2017

குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும்

குடிப்பழக்கம் ஒழுக்கக் கேடானது என்பது எனக்கு உடன்பாடானது அல்ல. ஆனால் குடிப்பழக்கம் உடலுக்குக் கேடானது என்பதை அனுபவபூர்வமாகவே நான் உணர்ந்திருக்கிறேன். ....
இந்த நூலின் அறிந்தவை என்னும் தலைப்பிலான இரண்டாம் பாகத்தில் நூலாசிரியனான என்னைச் சந்திப்பீர்கள் - மதுக் கிண்ணத்துடன். ஆம்!
நான் குடிகாரனாக இருந்திருக்கிறேன்.
கலைஞர்களுடன், கவிஞர்களுடன், பத்திரிகையாளர்களுடன், வெளிநாடுகளில் தூதரகங்களில், தாஜ் கொரமாண்டலில், அடையார் கேட்டில், சோழாவில், விக்டோரியாவில்...
மொத்தத்தில் விளைவுகள் என்ன தெரியுமா?
கல்லீரல் நோய்
குடலிறக்கம்
வயிறு வீக்கம்
நுரையீரல் புற்றுநோய்
இதயத்தில் இரத்த ஓட்டம் பாதிப்பு
மூளையில் மஞ்சள் காமாலை
வலிப்பு நோய்
ஸ்டான்லி மருத்துவமனை
இராயப்பேட்டை மருத்துவமனை
ஆசியாவிலேயே சிறந்த தமிழ்நாடு ஹாஸ்பிடல் ...

தமிழ்நாடு மருத்துவமனையினர் கொடுத்த கெடு இன்னும் இரண்டே இரண்டு ஆண்டுகள்’. அந்த இரண்டு ஆண்டுகளைக் கடந்து, இப்போது போனஸ் நாட்களில் இந்த நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இளைய தலைமுறையினருக்காக.
இந்தச் சமுதாயத்திற்காக நான் ஆற்ற வேண்டிய கடமையாகக் கருதி இந்த நூலை எழுதி முடித்திருக்கிறேன்.
இளைஞர்களே, மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாதீர்கள்.
- தனது நூலின் முன்னுரையில் இப்படி எழுதியிருப்பவர் அறந்தை நாராயணன்.


காலையில் சாப்பிடும்போது வாசிக்க எடுத்த புத்தகம் - குடியினால் குடை சாய்ந்த கலைக்கோபுரங்கள்.
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். விலை 120

*

அறந்தை நாராயணனை நான் நன்கு அறிவேன். நான் ஜனசக்தி அச்சகத்தில் வேலை செய்த காலத்தில் அவர் ஆசிரியர் குழுவில் இருந்தார். என்னைப்போலவே ஜிப்பா அணிந்திருப்பார். தோளில் ஜோல்னாப் பை. எரிமலை என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் எழுதுவார். கத்தையாகக் காகிதங்களில் எழுதிக் கொடுப்பார். கையெழுத்து அழகாக இருக்கும். இனிய தோழர், நகைச்சுவையாகப் பேசுவார்.

ஏராளமான திரைப்படப் பாட்டுப்புத்தகங்கள், கத்தை கத்தையாக பழைய திரைப்பட நோட்டீஸ்கள் அவரிடம் இருக்கும். பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நிகரான சினிமா தகவல் களஞ்சியம். எத்தனையோ பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர், ஏராளமான நூல்கள் எழுதியவர். தமிழ் சினிமாவின் கதை என்ற நூலுக்கு, முதல் முறையாக சினிமா குறித்த நூலுக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்றவர். இப்போது அவரைப்பற்றித் தேடிப்பார்த்தால், விக்கிபீடியாவில்கூட ஒரு வரிகூட இல்லை. ஒரு புகைப்படம்கூட இல்லை.

இளைஞர்களே, மதுப்பழக்கத்திலிலிருந்து மீண்டு புதுவாழ்வைத் துவக்க விரும்புகிறீர்களா?
இன்றே தொடங்குங்கள். இனிதே வாழுங்கள்.
இப்போது ஒரு கேள்வி
அரசாங்கம் நினைத்தால் கடுமையான சட்டங்கள் இயற்றி குடிப்பழக்கத்தை ஒழித்துவிட முடியாதா?
முடியாது என்பது வரலாற்று ஆதாரபூர்வமான பதில். ...
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
- அதே முன்னுரையில் அறந்தை நாராயணன்
குடிப்பழக்கத்தால் தான் பட்ட துன்பத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டாம் என்ற அக்கறை இதில் வெளிப்படுகிறது.

*

புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது தொடர்பாக நான் தொகுத்து முடித்திருக்கிற நூலில் கிட்டத்தட்ட இதே தொனிதான் இருக்கிறது என்பது எனக்கு நினைவு வந்தது.

ஏதேனுமொரு கட்டத்தில் புகைப்பவர்கள் எல்லாருக்கும் ஒரு பயம் வருகிறது. திடீர் இருமலோ, மூச்சிரைப்போ, தனக்கு ஆஸ்துமா வந்திருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தலாம். நீண்டகாலப் புகைப் பழக்கத்தின் காரணமாக அல்சர் அறிகுறிகள் தோன்றியிருக்கலாம். யாருக்காவது புற்று நோய் கண்டிருப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் புகைப்பதால் புற்றுநோய் வருமே என்ற அச்சம் பிறக்கலாம். அப்போது அவர்களுக்கு சிகரெட்டை விட்டொழிக்கும் ஆசை வருகிறது. முயற்சி செய்வார்கள், பலர் தோற்பார்கள். சிலர் வெற்றியும் பெறுவார்கள். நோய் அல்லது சிக்கல் அறிகுறிகள் குறைந்ததும், அந்த அச்சம் மறந்து போதும். பலர் மறுபடி புகைக்கத் தொடங்குவார்கள். ...

நானும் இப்படிப் பல நிலைகளையும் அனுபவித்தவன்தான். சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த புகைப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்று சுமார் நான்கு ஆண்டுகள் தீவிரமாக யோசித்தவன்தான், கடைசியில் ஒருநாள் விட்டொழித்தேன். அந்த நாள் 2016 செப்டம்பர் 22.

யாம் பெறும் இன்பம் பெறுக இவ்வையகம் என்று அப்போதுதான் தோன்றியது. என் அனுபவங்கள், வாழ்க்கைச் சம்பவங்கள், எல்லாவற்றையும் சேர்த்து எழுதினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள் என்ற யோசனை வந்தது. அதன் விளைவுதான் இந்நூல்.
- என் முன்னுரையில்

புகைத்தல் உடல் நலத்துக்குத் தீங்கு என்று எச்சரிக்கும் வேலையை மட்டுமே அரசு செய்கிறது. புகையிலைப் பழக்கத்தை நிறுத்த ஆலோசனைச் சேவைகள், மறுவாழ்வு மையங்கள், உளவியல் ரீதியான சிகிச்சையும் ஆதரவும் ஆகியவற்றை அரசுகள் வழங்குமானால் பெருத்த மாற்றம் நிகழக்கூடும். ஆனால், சுகாதாரம், மருத்துவம் ஆகிய அத்தியாவசியத் துறைகளைக்கூட படிப்படியாகக் கைகழுவி வரும் அரசுகள் இதைச் செய்யாது. இலவசமான பொது மருத்துவத் துறைகளை சீரழித்து, எல்லாரையும் தனியாரின் பக்கம் தள்ளிவிடுகின்றன.

புகைப்பதை நிறுத்துவது அரசின் சட்டங்களால் சாத்தியம் இல்லை. புகைப்பழக்கத்துக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அதிகபட்சமாக, நீங்கள் புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாமே தவிர, முற்றிலுமாக விட்டொழிக்கச் செய்யாது. புகைப்பதை எப்படி நிறுத்தலாம் என்று அரசு உங்களுக்கு ஆலோசனை தரப்போவதில்லை. புகைப் பழக்கத்துக்கு எதிரான ஆலோசனை தரும் சேவையில் தன்னார்வ நிறுவனங்களும் இந்தியாவில் இல்லை. புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது நம்முடைய முடிவைப் பொறுத்து மட்டுமே இருக்கிறது.


புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது குறித்த ஆலோசனைக் கட்டுரகள் வலைப்பூவில் தொடராக உள்ளன. முதல் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும். அந்தந்தக் கட்டுரையின் இறுதியில் அடுத்த கட்டுரைக்கான இணைப்பு இருக்கும்.

1 comment: